

நாட்டில் 15 ஆண்டுகள் பழமையான 4 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் சாலையில் இயக்கப்படுகின்றன. இவற்றுக்குப் பசுமை வரி விதிக்கப்பட உள்ளது எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக மாநிலத்தில் அதிகமான பழமையான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஏறக்குறைய 70 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன.
நாட்டில் 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்கள் குறித்த டிஜிட்டல் புள்ளிவிவரங்களை மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது. இதில் ஆந்திரா, மத்தியப் பிரதேசம், தெலங்கானா, லட்சத்தீவுகள் புள்ளிவிவரம் மட்டும் இல்லை. 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான வாகனங்களுக்குப் பசுமை வரி விதிக்கும் அம்சத்தை ஏற்கெனவே மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த 4 கோடிக்கும் அதிகமான 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வாகனங்களில் 2 கோடி வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாகும். இதில் கர்நாடக மாநிலம் முதலிடத்தில் உள்ளது. ஏறக்குறைய 70 லட்சம் பழைய வாகனங்கள் ஓடுகின்றன.
கர்நாடக மாநிலத்துக்கு அடுத்த இடத்தில் உத்தரப் பிரதேசம் உள்ளது. இங்கு 15 ஆண்டுகளுக்கும் மேலான 56.54 லட்சம் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில் 24.55 லட்சம் வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாகும்.
டெல்லியில் 49.93 லட்சம் வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை. இதில் 35.11 லட்சம் வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கு முந்தியவை.
தமிழகத்தில் 33.43 லட்சம் வாகனங்கள் 15 ஆண்டுகள் பழமையானவை. கேரளாவில் 34.64 லட்சம் வாகனங்களும், பஞ்சாப்பில் 25.38 லட்சம் வாகனங்களும், மேற்கு வங்கத்தில் 22.69 லட்சம் வாகனங்களும் உள்ளன.
மகாராஷ்டிரா, ஒடிசா, குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் 17.58 லட்சம் முதல் 12.29 லட்சம் வரையில் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் ஓடுகின்றன.
ஜார்கண்ட், உத்தரகாண்ட், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, அசாம், பிஹார், கோவா, திரிபுரா, தாதர் நாகர் ஹாவேலி, டாம் டையு ஆகிய மாநிலங்களில் ஒரு லட்சம் முதல் 5.44 லட்சம் வரையிலான 15 ஆண்டுகளுக்குப் பழமையான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழலைக் காக்கவும், காற்று மாசைக் குறைக்கவும் இந்த 15 ஆண்டுகளுக்கு முந்தைய வாகனங்களுக்குப் பசுமை வரியை விதிக்க மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது.
இதில் சிஎன்ஜி, எத்தனால், எல்பிஜி, பேட்டரி வாகனங்கள் ஆகிய மாற்று எரிபொருளில் இயக்கப்படும் வாகனங்களுக்குப் பசுமை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். பசுமை வரியிலிருந்து கிடைக்கும் வரி வருவாய், காற்று மாசைக் குறைக்கும் நடவடிக்கைக்குப் பயன்படும்.
இந்தத் திட்டத்தின்படி, சரக்குப் போக்குவரத்து வாகனங்கள் 8 ஆண்டுகள் பழமையானால், தகுதிச்சான்று பெறும்போது 10 முதல் 25 சதவீதம் சாலை வரியும், பசுமை வரியும் விதிக்கப்படும்.
தனிநபர்கள் வைத்திருக்கும் வாகனங்கள் 15 ஆண்டுகள் நிறைவடைந்தபின், ஆர்சி புதுப்பிக்கும்போது, பசுமை வரி விதிக்கப்படும். அரசுப் பேருந்துகளுக்குக் குறைவான பசுமை வரி விதிக்கப்படும். மேலும், வாகனங்கள் பெட்ரோல், டீசலில் இயக்கப்படுவதற்கு ஏற்ப வரியின் சதவீதமும் மாறும்.