Last Updated : 28 Mar, 2021 12:34 PM

 

Published : 28 Mar 2021 12:34 PM
Last Updated : 28 Mar 2021 12:34 PM

பஞ்சாப்பில் பாஜக எம்எல்ஏவின் சட்டையைக் கிழித்து சரமாரி தாக்குதல்: விவசாயிகளிடம் இருந்து தப்பித்துக் கடைக்குள் தஞ்சம்

பாஜக எம்எல்ஏ அருண் நராங்கைத் தாக்குதலில் இருந்து காப்பாற்றி அழைத்துச் சென்ற போலீஸார்: படம் | ஏஎன்ஐ.

சண்டிகர்

பஞ்சாப்பின் முக்த்சர் மாவட்டத்தில் உள்ள மலோத் நகரில் பாஜக எம்எல்ஏ ஒருவர் மீது விவசாயிகள் சரமாரியாகத் தாக்கி, அவரின் ஆடைகளைக் கிழித்தெறிந்தனர். விவசாயிகளின் தாக்குதலைத் தாங்க முடியாத எம்எல்ஏ வணிக வளாகத்துக்குள் தஞ்சமடைந்தார்.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த 120 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். அதிலும் பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டம் தீவிரமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாஜக எம்எல்ஏக்கள் மீது விவசாயிகள் கடும் ஆத்திரத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் அபோகர் தொகுதியின் எம்எல்ஏ அருண் நராங் நேற்று மலோத் நகரில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்தச் சந்திப்புக்கு எம்எல்ஏ அருண் நராங் வந்தபோது, அங்கு போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் அவரைச் சூழ்ந்துகொண்டு அவர் மீதும், அவர் வந்த வாகனங்கள் மீதும் கறுப்பு மை ஊற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.

அங்கிருந்து எம்எல்ஏ அருண் நராங்கை போலீஸார் பாதுகாப்பாக ஒரு கடைக்குள் அழைத்துச் சென்றனர். நீண்ட நேரத்துக்குப் பின் அருண் நராங்கை போலீஸார் பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தனர்.

ஆனால், அங்கிருந்த விவசாயிகள், திடீரென நராங் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் எம்எல்ஏவின் ஆடைகள் கிழிக்கப்பட்டன. பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸார் விவசாயிகளைத் தடுக்க முயன்றும் விவசாயிகள் தாக்குதலில் இருந்து எம்எல்ஏ அருண் தப்பிக்க முடியவில்லை.

அதன்பின் கிழிந்த ஆடைகளுடன் மீண்டும் பாதுகாப்பாக ஒரு கடைக்குள் எம்எல்ஏ அருணை போலீஸார் தங்க வைத்தனர். போலீஸார் கூடுதலாக வரவழைக்கப்பட்டுப் பாதுகாப்புடன் வேறு ஒரு வாகனத்தில் பாஜக எம்எல்ஏ அருண் அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக முக்த்சர் போலீஸார் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அடையாளம் தெரியாத 250 பேர் மீது கொலை முயற்சி, தாக்குதல், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், கலவரம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

பாஜக எம்எல்ஏ அருண் நராங் நிருபர்களிடம் கூறுகையில், "என்னைச் சூழ்ந்துகொண்ட விவசாயிகள் என் முகத்திலேயே குத்தினர். என் ஆடைகளைக் கிழித்து என்னை அவமானப்படுத்தினர். நான் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தேன். அதற்கு விவசாயிகள் அனுமதிக்கவில்லை" எனத் தெரிவித்தார்.

பாஜக எம்எல்ஏ அருண் நராங் மீது விவசாயிகள் நடத்திய தாக்குதலுக்கு பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். ''மாநிலத்தின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். வன்முறையில் விவசாயிகள் ஈடுபடக் கூடாது. விவசாயிகள் பிரச்சினையைப் பிரதமர் மோடி விரைவில் தீர்க்க வேண்டும்'' என்று அமரிந்தர் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x