

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஒருவருக்கொருவர் நட்புடனேயே தேர்தலை சந்திக்கின்றன, இருகட்சிகளுக்கும் ரகசிய கூட்டணி உள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் கூறினார்.
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்தான் கடுமையான போட்டி இருந்து வருகிறது. பாஜக தனித்து போட்டியிடுகிறது.
2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இதே கூட்டணி களம் கண்டன. ஆனால் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் உள்ள வலிமை மிக்க ஈழவ சமூகம் சார்ந்த அரசியல் அமைப்பான பாரத் தர்ம ஜனசேனாவுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்டது. 15.8 சதவீத வாக்குகளுடன், ஓரிடத்தில் பாஜக வென்றது.
கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே மட்டுமே இதுவரை நேரடி போட்டி நிலவும் நிலையில் இந்த முறை தனது வாக்கு வங்கியை காண்பிக்கும் நோக்குடன் பாஜகவும் களமிறங்கியுள்ளது.
இந்தநிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் பல பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கேரள மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஒருவருக்கொருவர் நட்புடனேயே தேர்தலை சந்திக்கின்றன. இருகட்சிகளுக்கும் ரகசிய கூட்டணி உள்ளது. இருவருக்கும் பெரிய அளவில் கொள்கை வேறுபாடு இல்லை. இருகட்சிகளுமே வளர்ச்சிக்கு எதிரான கட்சிகளே.
இரு கட்சிகளுமே மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்குகின்றன. இருகட்சிகளும் மக்களை திசை திருப்பி வாக்குகளை கவர முயற்சிக்கின்றன. ஆனால் கேரள மக்கள் வளர்ச்சியை விரும்புகிறார்கள். வளர்ச்சியை முன் வைக்கும் பாஜகவையே அவர்கள் ஆதரிப்பார்கள்’’ எனக் கூறினார்.