

கேரள சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் இடதுசாரி கூட்டணி சார்பில் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:
மக்களை பிளவுபடுத்தவே குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) கொண்டு வரப்பட்டது. மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஒன்றே இந்த சட்டம். நாட்டில் பல ஆண்டு களாக வசித்து வருவோரிடம், உங்களுக்கு இங்கு வசிக்க உரிமை இல்லை என கூறப்படுகிறது. சிஏஏ கொண்டுவரப்பட்ட போது அதனை கேரள இடதுசாரி அரசு வெளிப்படையாக எதிர்த்தது. கேரளத்தில் அச்சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்தோம்.
உ.பி.யில் குறிப்பிட்ட உடை அணிந்தவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். ஒரு ரயிலில் கன்னியாஸ்திரிகள் அச்சுறுத்தப் பட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் ஒருபோதும் நடக்க கூடாது. நமக்கு மத சுதந்திரம் உள்ளது. ஆனால் பிற மத நம்பிக்கை உள்ளவர்களை சங் பரிவார் அமைப்புகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இத்தேர்தல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் ஜனநாயக நடைமுறைகள் மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களை பலவீனப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. நாட்டில் வகுப்புவாத பிளவுகளை உருவாக்க அல்லது மக்களை பிளவுபடுத்தும் முயற்சிகள் நடந்தபோதெல்லாம் கேரள இடதுசாரி அரசு அதற்கு எதிராக நின்றது. நாட்டின் மதச்சார்பற்ற விழுமியங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவோரை மத்திய அரசு பாதுகாக்கிறது.
இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.