Published : 28 Mar 2021 03:15 AM
Last Updated : 28 Mar 2021 03:15 AM

பங்கு வர்த்தகத்தில் அதிக ஆர்வம் காட்டும் இளைஞர்கள்

பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாக ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனம் தெரிவித் துள்ளது.

கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தில் புதிதாக டிமேட் கணக்கு தொடங்கியவர்களில் 72 சதவீதம் பேர் அதற்கு முன் பங்கு வர்த்தகம் செய்யாதவர்கள் என்று கூறியுள்ளது. இந்தியர்களில் பெரும்பாலானோர் முதலீடு என்றாலே தங்கம், ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட் என்பதில்தான் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட், தங்கம், வங்கி டெபாசிட் என அனைத்துமே கவர்ச்சியை இழந்து வருகின்றன.

இந்த முதலீடுகளில் பெரிய அளவில் வருமான வளர்ச்சி இல்லைஎன்பதால் மில்லினியல் தலைமுறைஇளைஞர்கள் மாற்று வழியாக பங்குச் சந்தையைத் தேர்ந்தெடுக்க தொடங்கியுள்ளனர். 1981 முதல் 1995 வரையிலான ஆண்டுகளில் பிறந்தவர்கள் மில்லினியல் தலைமுறையினர் என அழைக்கப்படுகின்றனர். அதாவது 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் மில்லினியல் அல்லது ஜென் ஒய் தலைமுறையினர் ஆவர்.

கடந்த வருடத்தில் கரோனா பாதிப்பு காரணமாக பெரும்பாலானோர் வேலை இழப்பையும், சம்பளக் குறைப்பையும் சந்தித்தனர். இதனால் நிதி எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதைப் பலரும் உணரத் தொடங்கியுள்ளனர். இதன் எதிரொலியாகவே பலரும் அதிக வருமானம் தரும் முதலீட்டுத் திட்டங்களில் தங்களின் முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின் றனர். இந்தியப் பங்குச் சந்தைகள் கரோனா நெருக்கடி காலத்திலும் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டன. 2020 மூன்றாம் காலாண்டில் 9 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இது மார்ச் 2018-க்குப் பிறகு கண்ட அதிகபட்ச ஏற்றமாகப் பதிவானது. இதனால் இளைஞர்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக முதலீடு செய்வதோடு அல்லாமல் தற்போது நேரடியாகவும் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்து வருகின்றனர். 2020 நிலவரப்படி பங்கு வர்த்தக கணக்குகள் எண்ணிக்கை 1.04 கோடியாக உள்ளது. சர்வதேச பங்குச் சந்தைகளில் அதிகமான முதலீட்டாளர்கள் உள்ள இரண்டாவது சந்தையாக இந்திய பங்குச் சந்தை உள்ளது. ஆனாலும் 136 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் 4 சதவீதத்துக்கும் குறைவான மக்கள் மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகிறார்கள்.

சீனாவில் 12.7 சதவீதம் பேர் பங்குச் சந்தைகளில் முதலீடுகளை மேற்கொள்கின்றனர். தற்போது இந்திய இளைஞர்களிடையே பங்குச் சந்தை குறித்த ஆர்வம் அதிகரித்து வருகிறது. இணைய பயன்பாடு அதிகரிப்பு, டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்புகள் பெரிய அளவில் இதற்கு உதவியாக உள்ளன. தற்போதைய வேகத்தில் முதலீடுகள் தொடர்ந்தால் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் சீனாவின் இடத்தை எட்ட முடியும் என்று மூத்த பங்குச் சந்தை முதலீட்டாளர் மார்க் மொபியஸ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x