Published : 28 Mar 2021 03:16 AM
Last Updated : 28 Mar 2021 03:16 AM

வங்கதேச இந்து கோயில்களில் பிரதமர் மோடி வழிபாடு

புதுடெல்லி/டாக்கா

வங்கதேசத்தின் பழைமையான இந்து கோயில்களில் பிரதமர் மோடி நேற்று வழிபாடு நடத்தினார்.

வங்கதேசத்தின் 50-வது சுதந்திர தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

இரண்டாவது நாளான நேற்றுஅவர் வங்கதேசத்தின் ஈஸ்வரிபூரில் அமைந்துள்ள யஷோரேஸ்வரி காளி கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி கிரீடத்தை காளி தேவிக்கு, மோடி சூட்டினார்.

அங்கு பிரதமர் நரேந்திர மோடிகூறும்போது, "51 சக்தி பீடங்களில் ஒன்றான காளி கோயிலில் வழிபட வாய்ப்பு கிடைத்தது எனதுபாக்கியம். மதம், சமூக நிகழ்ச்சிகளுக்கு பயன்படும் வகையில் இந்திய அரசு சார்பில் இங்கு சமுதாய கூடம் கட்டித் தரப்படும். இந்த சமுதாய கூடத்தில் புயல், மழை காலங்களில் பொதுமக்கள் தங்கி கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சொந்த கிராமமான துங்கிபாராவுக்கு சென்று மறைந்த தலைவருக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

ஓராகண்டி கோயிலில் வழிபாடு

பின்னர் கோபால்கன்ச் பகுதியில் ஓராகண்டியில் அமைந்துள்ள ஹரிசந்திர தாக்குர்பாரி கோயிலில் பிரதமர் வழிபாடு நடத்தினார். இது மதுவா சமுதாய மக்களின் புனித தலமாகும். பிரதமருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரிங்லாவும் உடன் சென்றனர்.

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது பெரும் எண்ணிக்கையிலான மதுவா சமுதாய மக்கள் வங்கதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து மேற்குவங்கத்தில் தஞ்சம் அடைந்தனர். இதன்பிறகு 1971 போரின்போதும் மதுவா சமுதாய மக்கள் மேற்குவங்கத்தில் அகதிகளாக குடியேறினர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் மேற்குவங்கத்தில் வாழும் மதுவா சமுதாய மக்களுக்கு அதிகாரபூர்வமாக குடியுரிமை வழங்கப்படும் என்று பாஜக உறுதி அளித்துள்ளது. அவர்களின் புனித தலத்தில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மேற்குவங்க தேர்தல்

ஓராகண்டியில் பிரதமர் நரேந்திர மோடி கூறும்போது, "கடந்த 2015-ம் ஆண்டில் வங்கதேசத்துக்கு வந்தபோது ஓராகண்டி வருவதற்கு விரும்பினேன். ஆனால் வாய்ப்புகிடைக்கவில்லை. குரு ஹரிசந்த்தாக்குரின் பிறந்த பூமியான ஓராகண்டியில் கால் பதித்ததை பெரும் புண்ணியமாக கருதுகிறேன். ஒரு காலத்தில் தீண்டதகாதவர்களாக ஒதுக்கப்பட்ட மதுவா மக்களுக்கு வழிகாட்ட இந்து மதத்தின் மதுவா வழிபாட்டு நடைமுறைகளை ஹரிசந்த் தாக்குர் கொண்டு வந்தார்" என்று தெரிவித்தார்.

மேற்குவங்கத்தின் நாடியா, வடக்கு 24 பர்கானஸ், தெற்கு 24 பர்கானஸ் மாவட்டங்களில் மதுவா இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மதுவா மக்களின் ஓட்டு பாஜகவுக்கு கிடைக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது நாள் சுற்றுப் பயணத்தின் இறுதி கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டாக்காவில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்துப் பேசினார். அப்போது வர்த்தகம், சுகாதாரம் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அப்போது வர்த்தகம், கல்வி,பேரிடர் மேலாண்மை, விளையாட்டு, தொடர்பாக 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

வங்கதேசத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ரூபூரில்அந்த நாட்டின் முதல் அணு மின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் ரஷ்யா, இந்தியா இணைந்து கட்டி வரும் இந்த அணு மின்நிலையம் வரும் 2023-ம் ஆண்டில்செயல்பட தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூபூர் அணு மின் நிலையத்தின் ஒரு பகுதி திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் நேற்று அடிக்கல் நாட்டினர்.

வங்கதேச தலைநகர் டாக்கா, மேற்குவங்கத்தின் புதிய ஜல்பைபுரி இடையே மிதாலி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை இரு பிரதமர்களும் கூட்டாக தொடங்கிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x