

நாட்டில் அனைத்து குடிமக்களுக் கும் நீதி கிடைக்க வேண்டும். இதற்கு பயனுள்ள, வலுவான மற்றும் ஜனநாயகமாக்கப்பட்ட சட்ட அமைப்பு அனைவருக்கும் கிடைக்கும்படி உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து வலியுறுத்தியுள்ளார்.
சட்ட சேவைகள் தினத்தை முன்னிட்டு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் தலைவருமான (நால்சா) தத்து, நேற்று எழுத்துப்பூர்வமாக வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:
சட்டத்தின் ஆட்சியை அச்சமின்றி உறுதி செய்ய, பயனுள்ள மற்றும் வலுவான சட்ட அமைப்பு அவசியம். அது தான் ஜனநாயகத்தின் அடிப்படை துாணாகும். நீதித் துறையில் சமமான பலன் மற்றும் பாரபட்சமற்ற முறைகளை பின்பற்றினால் தான், நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் சமமான நீதி கிடைக்கும். அதற்கு சட்ட அமைப்பு சமமாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நமது சமூகம் பன்முகத் தன்மையும் சிக்கலும் நிறைந்தது. தேசிய சட்ட சேவைகள் ஆணையம் சுதந்திரம் பெற்ற நாள் முதலாக சமூகத்துக்கு தேவையான சட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. எனினும், பல்வேறு வடிவங்களில் தொடர்ச்சியாக எழும் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல்களால், நமது சமூகத்தின் சில பிரிவுகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. ஆகவே அவர்களின் வீடு தேடி நீதி கிடைப்பதை உறுதி செய்யும் பணிகளில் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். நமது அரசியலமைப்பு அனைவருக்கும் உரிய நீதி வழங்கும் வகையில் தான் அமைந்துள்ளது. அதன் அடிப்படையில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு மற்றும் பொருத்தமான சட்டத்தின்படி நீதி கிடைக்கவும் வழி காண வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.