Published : 27 Mar 2021 03:48 PM
Last Updated : 27 Mar 2021 03:48 PM

மேற்கு வங்கத்தில் நண்பர்கள்; இங்கு எதிரிகள்: சித்தாந்தரீதியாக குழப்பத்தில் இருக்கிறார்கள்: காங். இடதுசாரிகள் மீது ஜே.பி.நட்டா தாக்கு

தர்மடம் தொகுதிக்கு உட்பட்ட கஞ்சானி பகுதியில் வாக்குச் சேகரித்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா: படம் | ஏஎன்ஐ.

கண்ணூர்

ஊழல் என்ற வார்த்தைக்கு அர்த்தமே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணியும்தான். இரு கூட்டணியையும் மக்கள் நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா காட்டமாகத் தெரிவித்தார்.

கேரளாவில் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் மூன்றாவதாக பாஜகவும் கடும் போட்டியில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், கண்ணூர் மாவட்டம் சக்கரக்கல் பகுதியில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர். சி.கே.பத்மநாபனை ஆதரித்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தர்மடம் தொகுதியில் முதல்வர் பினராயி விஜயனை எதிர்த்து பத்மநாபன் போட்டியிடுகிறார்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஜே.பி. நட்டா பேசியதாவது:

''ஊழலைப் பற்றிப் பேசினாலே இரு கட்சிகள்தான் நினைவுக்கு வருகின்றன. கேரளாவில் ஊழல் என்றாலே, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சரிதா நாயருடன் சேர்ந்து நடத்திய சோலார் ஊழல், இடதுசாரிகள் ஆட்சி என்றாலே, ஸ்வப்னா சுரேஷுடன் சேர்ந்து செய்த தங்கக் கடத்தல்தான்.

தங்கக் கடத்தல் வழக்கை மத்திய விசாரணை அமைப்புகள் விசாரிக்கும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். ஆனால், மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணையைத் தொடங்கியபோது, மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் மத்திய அரசு கட்டம் கட்டுகிறது என்று பேசுகிறார்கள்.

காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் மற்றும் இடதுசாரிகள் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி குறித்து மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சித்தாந்தரீதியான சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றன. கேரளாவில் இரு கட்சிகளும் எதிர் துருவங்களாக இருந்து போட்டியிடுகின்றன, ஆனால், மேற்கு வங்கத்தில் பாஜகவை எதிர்த்து இரு கட்சிகளும் கைகோர்த்து நிற்கின்றன.

2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது. அப்போது கேரள அரசின் வளர்ச்சிக்கு ரூ.2 லட்சம் கோடி வழங்கப்பட்டது. இதற்கு முன் மத்தியில் ஆண்ட அரசு வழங்கிய தொகையைவிட 3 மடங்கு அதிகமாக வழங்கினோம்.

கன்னியாகுமரி-மும்பை நெடுஞ்சாலை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. மெட்ரோ ரயில், தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு போன்ற எண்ணற்ற திட்டங்கள் கேரளாவுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

சபரிமலை விவகாரத்தில் கோயிலின் பாரம்பரியத்தைக் காக்க இறுதிவரை பாஜக போராடியது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முதல்வரும் போராட்டத்தை அடக்குவதிலேயே குறியாக இருந்தார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி மவுனமாக வேடிக்கை பார்த்தது''.

இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x