

உத்தரப் பிரதேசத்தின் முக்கிய மாவட்டங்களான ஆக்ரா, கோரக்பூரில், தமிழகத்தைச் சேர்ந்த இரு ஐபிஎஸ் அதிகாரிகளை எஸ்எஸ்பிக்களாக பணியமர்த்தியுள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
உத்தரப் பிரதேச சிங்கம்’ என்றழைக்கப்படும் ஜி.முனிராஜ் ஆக்ராவிலும், கோரக்பூரில் பி.தினேஷ்குமாரும் எஸ்எஸ்பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக ஆளும் உ.பி.யில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக உள்ள தமிழர்களைத்தான், முதல்வர் யோகி தன் அரசின் முக்கியப் பணிகளில் பயன்படுத்தி வருகிறார்.
அவரது சொந்த மாவட்டமான கோரக்பூரில் சிவகங்கையைச் சேர்ந்த தமிழரான கே.விஜயேந்திர பாண்டியன் ஆட்சியராக உள்ளார்.
டெல்லியை ஒட்டியுள்ள ஐ.டி மாநகரமான நொய்டாவிலும் ஐபிஎஸ் அதிகாரிகளாக இரண்டு தமிழர்கள் பணியாற்றுகின்றனர். அங்கு தமிழர்களான சு.ராஜேஷ், துணை ஆணையராகவும், ஜி.இளமாறன் கூடுதல் உதவி ஆணையராகவும் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் பல தமிழர்களான ஐஏஎஸ் அதிகாரிகள் முக்கியத் துறைகளிலும், பல மாவட்டங்களின் ஆட்சியர்களாகவும் உள்ளனர். இச்சூழலில், எஸ்எஸ்பிக்களான அலிகரில் இருந்த முனிராஜுக்கும், ஜான்சியில் இருந்த தினேஷ்குமாருக்கும் புதிதாக வேறு முக்கிய மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
உ.பி.,யில் பதட்டமான நகரங்களில் முக்கியமான அலிகரின் எஸ்எஸ்பியாக ஒரு வருடத்திற்கும் மேலாக பணியாற்றும் முனிராஜ் ஆக்ராவிற்கு மாற்றப்பட்டுள்ளார். உலக அதிசயமான தாஜ்மகால் அமைந்துள்ள இம்மாவட்டம் சர்வதேச சுற்றுலாவாசிகளில் முக்கியத்துவம் பெற்றது.
இதனால், ஆக்ராவிலும் சட்டம் ஒழுங்கை சமாளிப்பதும், கிரிமினல் குற்றங்களைத் தடுப்பது பெரும் சவாலானப் பணியாகும். மாவ், சண்டவுலி, பரேலி, புலந்த்ஷெஹர், அலிகர் போன்ற மாவட்டங்களின் பிரச்சினைகளை சமாளித்ததால் முனிராஜ், ‘உபி சிங்கம்’ என்றழைக்கப்படுகிறார்.
அதேபோல், உபியின் எட்டாவா, கன்னோஜ், சஹரான்பூர், கான்பூர் மாவட்டங்களில் திறமையுடன் பணிசெய்ததாகப் பெயரெடுத்தவர் தினேஷ்குமார். இவரை தனது சொந்த மாவட்டமான கோரக்பூரில் முதல்வர் யோகி அமர்த்தியுள்ளார்.
சஹரான்பூரின் எஸ்எஸ்பியாக இருந்த போது தினேஷ்குமார், சி.ஏ.ஏவிற்கு எதிரானப் போராட்டங்களை முஸ்லிம்களிடம் பேசி அமைதியாக நடத்தச் செய்தார். இதில் ஒருவரும் கைதாகாமல், மற்ற பல பகுதிகளைப் போல் தடியடிகளும் நடத்தப்படாமல் பாராட்டைப் பெற்றார்.
தமிழக அரசு வேளாண் பல்கலை.யில் படித்தவர்கள்..
இவ்விரண்டு இளம் அதிகாரிகளில் முனிராஜ், தர்மபுரியின் அ.பாரப்பட்டியை சேர்ந்தவர். தினேஷ்குமார், மேட்டூர் தாலுகாவின் சின்னதண்டா கிராமத்தை சேர்ந்தவர்.
விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இருவருமே கோயம்புத்தூரின் தமிழக அரசு வேளாண் பல்கலைகழகத்தில் பயின்றவர்கள். கடந்த 2009 ஆம் ஆண்டில் ஒரே சமயத்தில் ஐபிஎஸ் பெற்று உபியில் இருவரும் பணியாற்றி வருகின்றனர்.
ஹோலி பண்டிகை வருவதையொட்டி இருவருமே புதிய பணியின் பொறுப்பை உடனே எடுக்க உள்ளனர். உ.பி,யில் தமிழகத்தைச் சேர்ந்த 10 ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் 13 ஐஏஎஸ் அதிகாரிகளும் பணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.