மகா கூட்டணியின் வாக்கு வங்கியை தவறாகக் கணித்து விட்டோம்: பாஜக

மகா கூட்டணியின் வாக்கு வங்கியை தவறாகக் கணித்து விட்டோம்: பாஜக
Updated on
1 min read

பிஹார் தேர்தல் தோல்விகளுக்கான பல்வேறு காரணங்களை ஆராய்ந்த பாஜக, மகாகூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்கு வங்கியை தவறாகக் கணித்து விட்டோம் என்று கூறியுள்ளது.

நேற்று நடந்த நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த காரணமே பிரதானமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் தோல்விக்காக அமித் ஷா-வை நீக்கும் எண்ணமில்லை என்றார் அருண் ஜேட்லி. “வேறு மாநிலங்களில் பாஜக நன்றாகவே உள்ளது” என்றார்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் ஏனையோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை அமித் ஷா சந்தித்தார்.

அருண் ஜேட்லி கூறியது:

2014 பொதுத் தேர்தலில் இந்த மகாக் கூட்டணி கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டன. நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் வாக்கு விகிதம் 38.8%, மகாக்கூட்டணியின் வாக்கு விகிதம் 45.3%. ஆனால் அப்போது தனித்தனியே போட்டியிட்டன. எனவேதான், கூட்டணி என்று ஏற்படும் போது பரஸ்பரம் வாக்குகள் அப்படியே முழுமையாக அங்கு சென்று விடாது என்று கருதினோம், எனவே இதனுடன் பிரதமரின் பிரச்சாரமும் சேர்ந்து அந்த மூவர் கூட்டணி எங்களை வெல்ல முடியாது என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் தவறு என்று நிரூபிக்கப்பட்டது.

அமித் ஷா-வின் தலைமையின் கீழ் ஹரியாணா, மஹாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், ஆகிய மாநிலங்களில் வென்றோம், மற்றும் கேரளாவில் ஓரளவுக்கு இருக்க முடிவதும் அமித் ஷாவின் பங்களிப்பினால்தான்.

மோகன் பாகவத், இட ஒதுக்கீடு பற்றி கூறிய கருத்து தோல்விக்கு காரணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஆதரவாகத்தான் பாஜக உள்ளது என்பதை நாங்கள்தெளிவு படுத்திவிட்டோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in