

மும்பையில் வணிக வளாகம் ஒன்றில் இயங்கி வந்த மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 70 கரோனா நோயாளிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
மும்பை பாந்தூப் பகுதியில் ‘ட்ரீம்ஸ் மால்’ என்ற வணிக வளாகம் உள்ளது. ஐந்து தளங்களைக் கொண்ட இந்தக் கட்டிடத்தின் 3-வது தளத்தில் ‘சன்ரைஸ்’ என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டது. அப்போது 78 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்ததாகவும் இவர்களில் பெரும்பாலானோர் கரோனா நோயாளிகள் எனவும் கூறப்படுகிறது.
தீவிபத்து குறித்த தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். சுமார் 70 நோயாளிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, வேறுமருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர்.
மும்பையில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பை மேயர் கிஷோரி பெத்னேகர் சம்பவ இடத்தை பார்வையிட்டார். வணிக வளாகத் தில் மருத்துவமனை இயங்கி வந்தது குறித்து அவர் வியப்பு தெரிவித்தார். இதற்கு அனுமதி வழங்கியதில் விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.