Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM

மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்த துடிக்கும் இரு பெண்கள்; நீதி கேட்டு தேர்தலில் போட்டி: தர்மடத்தில் வாகைசூடுவாரா பினராயி விஜயன்?

நாட்டிலேயே படித்தவர்கள் அதிகம் நிறைந்த மாநிலம் கேரளம். அரசியல் படுகொலைகளும் இங்குதான் அதிகம். இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரிகளுக்கு எதிரான பழி வாங்கும் படலமாக இரு பெண்கள் களத்தில் நிற்கின்றனர்.

வாளையார் அருகே அட்டப்பாலம் பகுதியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 13, மற்றும் 9 வயதே ஆன இரு சிறுமிகள் கடந்த 2017-ம் ஆண்டு, வீட்டில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். சிறுமிகள் பாலியல் வன்மத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேர் ஆதாரம் இல்லை என்பதால் விடுவிக்கப்பட்டனர். கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கு சிபிஐ வசம் மாறியது.

இந்த மரணத்துக்கு உரிய நீதிகிடைக்கவில்லை என 3 ஆண்டுகளாகவே போராடி வருகிறார் உயிர்இழந்த சிறுமிகளின் தாய் (பாக்யவதி). இவ்விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகள் உரியமுறையில் விசாரணை நடத்தவில்லை என அண்மையில் மொட்டை போட்டு போராட்டம் செய்தார். இப்போது கேரள அரசுக்கு தன் எதிர்ப்பைக் காட்டும்வகையில் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக அவர் நிற்கும் தர்மடம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

தன் மகள்களின் உடைகள், செருப்பு ஆகியவற்றோடு தர்மடம் தொகுதிக்குள் சுற்றிவரும் இவர், தன் மகள்களின் மரணத்துக்கு நீதி கேட்டு தேர்தலை சந்திப்பதாக கூறுகிறார்.

நியாயமாக எனக்குக் கிடைக்க வேண்டிய நீதிகிடைக்காமல் போன தற்கு டிஎஸ்பி சோஜன் மற்றும் வயலார் சப் இன்ஸ்பெக்டர் சாக்கோ ஆகியோரும் காரணம். அவர்களை தண்டிக்காத இந்த இடதுசாரி அரசுக்கு எதிராக தேர்தலில் நிற்கிறேன் என பிரச்சாரம் செய்கிறார். அண்மையில் குடியரசு தினத்தன்று தனது குழந்தைகளின் மரணத்துக்கு நீதிகேட்டு பாலக்காட்டில் சத்யாகிரகத்தில் ஈடுபட்டார். இப்போது மார்க்சிஸ்ட் கட்சி யின் முதல்வர் வேட்பாளர் பினராயி விஜயனுக்கு எதிராகவே அவரது சொந்தத் தொகுதியில் களத்தில் இருக்கிறார்.

தன் குழந்தைகளை நினைவூட்டும் வகையில் சின்ன குழந்தைகளுக்கான ஆடை சின்னத்தைக் கேட்டு வாங்கியிருக்கிறார்.

பினராயிக்கு எதிராக இந்தப் பெண் தீவிர பிரச்சாரம் செய்தாலும் இடதுசாரிகள் அலட்டிக்கொள்ளவில்லை. காரணம், இடதுசாரிகள் வலுவாக வேரூன்றி இருக்கும் கண்ணூர், தலச்சேரி தாலுகாக்களை உள்ளடக்கியதுதான் தர்மடம் தொகுதி. கடந்த 2016-ம் ஆண்டு தர்மடம் தொகுதியில் களம் இறங்கிய பினராயி விஜயன் 36,905 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் தர்மடத்தில் மார்க்சிஸ்ட் கட்சியே அதிக இடங்களைக் கைப் பற்றியது. இடதுசாரிகளுக்கு அந்த அளவுக்கு வலுவாக இருக்கும் தர்மடம் பினராயி விஜயனுக்கு மீண்டும்வெற்றியை பெற்றுத் தரும் என்கிறார்கள் தொகுதிவாசிகள். காங்கிரஸ் சார்பில் கண்ணூர் மாவட்டச் செயலாளர் ரெகுநாத்தும், பாஜக சார்பில் பத்மநாபனும் போட்டியிடுகின்றனர்.

கணவர் கொலை

கேரளாவின் வடகரை தொகுதி யில் ரமா களத்தில் நிற்கிறார். இவரது கணவர் சந்திரசேகரன் மார்க்சிஸ்ட் கட்சியில் அதிதீவிரமாக இயங்கியவர். கோழிக்கோடு மாவட்டத்தின் முக்கிய மார்க்சிஸ்ட் தலைவராகவும் வலம் வந்தார். கடந்த 2009-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து வெளி யேறிய சந்திரசேகரன் புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி என்னும் கட்சியை நிறுவினார். இந்நிலையில் அதில் தீவிரமாக இயங்கிய சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூவரால் கடந்த 2012 ஆம் ஆண்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையின் போது சந்திர சேகரின் உடலில் 51 இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தது. தன் கணவரின் மரணத்துக்குப் பின் அரசியல் களத்துக்கு வந்த ரமா, கடந்த 2016-ம் ஆண்டும் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி யடைந்தார். இந்தத் தேர்தலிலும் புரட்சி கர மார்க்சிஸ்ட் கட்சி (ஆர்.எம்.பி.ஐ)சார்பில் வடகரை தொகுதியில் போட்டியிடுகிறார்.

தன் வீட்டுவாசலில் இருக்கும் கணவர் சந்திரசேகரின் சிலையை வணங்கிவிட்டுத்தான் தினமும் பிரச்சாரத்துக்கு செல்கிறார் ரமா. இதுகுறித்து ரமா இந்துதமிழ்திசையிடம் கூறுகையில், ‘கேரளத்தில் அரசியல் படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பது எனது முதல் கோரிக்கை. அனைவரும் மனிதாபிமானத்துடன் நடத் தப்படவேண்டும். என் கணவர் கொலை செய்யப்பட்டதுபோல் இன்னொரு அநீதி இனி நடக்கக்கூடாது. நான் அரசியலுக்கு வருவதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை. அரசியல் படுகொலைகளே என்னை அரசியலுக்கு அழைத்துவந்தது. சர்வதேசத் தரத்தில் வடகரை மக்களுக்கு கல்வி கிடைக்க பாடுபடுவேன். வடகரையில் கடலோர கிராமங்கள் அதிகம். அவர்களின் பாதுகாப்பான வாழ்வுக்கு துணைநிற்பேன். எல்.டி.எப்-ன் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக களமாடுவேன். விளையாட்டுத்துறைக்கு ஊக்கமளிப்பேன் எனச் சொல்லி மக்களை சந்தித்துவருகிறேன். அரசியல் பணிக்காக வீட்டை விட்டு வெளியே செல்லும் ஒருவர் பாதுகாப்பாக வீட்டுவரமுடியும் என்னும் சூழலை உருவாக்க வேண்டும். அதற்காகத்தான் பாடுபடுகிறேன். இதுகுறிப்பிட்ட தலைவருக்கோ,மார்க்சிஸ்ட் கட்சிக்கோ எதிரான போராட்டம் அல்ல. அவர்களது கொள்கைகளையும், தெளிவற்ற இடதுசாரிதனத்தையும் எதிர்க்கிறேன்’’ என்றார்.

ஆர்.எம்.பி.ஐ கட்சியில் இத்தொகுதி யில் வேணு என்பவர்தான் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் ரமா போட்டியிட்டால் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தாமல் ஆதரவுதரும் என அறிவிக்கவே, கடைசிநேரத்தில் ரமாவே களம் இறங்கினார்.

மார்க்சிஸ்ட் தலைமையிலான எல்.டி.எப் கூட்டணியில் இத்தொகுதியில் லோக் ஜனதாதளம் போட்டியிடுகிறது. கேரளத்தில் ஆர்.எம்.பி.ஐ இந்த ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறது. கணவர், குழந்தைகளின் இறப்புக்கு நீதிகேட்டு இருபெண்கள் அரசியல் களத்தில் போராடி வருவது கேரளத் தேர்தல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x