

இந்த 'ஆண்டின் சிறந்த மனிதர்' விருதுக்கான போட்டியாளர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் முகேஷ் அம்பானி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் 'டைம்' பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் சிறந்த மனிதரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருதுக்கான போட்டியாளர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் முகேஷ் அம்பானி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரான்ஸ் அதிபர் ஹாலந்தே, சீன அதிபர் ஜிபிங், ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அபு பெக்கர் அல் பாக்தாதி என மொத்தம் 58 பேர் இப்படியலில் இடம் பெற்றுள்ளனர்.
நல்ல விஷயங்களுக்காகவோ அல்லது தவறான விஷயங்களுக்காகவோ அதிகளவில் செய்திகளில் பேசப்பட்ட நபருக்கு இந்த விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருது அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.
'டைம்' இதழ் இந்த ஆண்டுக்கான விருது குறித்து கூறும்போது, "இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க அதிக முயற்சிகளை எடுத்து வருகிறார். அதே வேளையில் வலதுசாரி கோட்பாடுகளுக்காகவும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பிரதமர் மோடி கடந்த ஆண்டும் போட்டியாளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தார். ஆனால், அவர் 'டைம்' இதழ் ஆசிரியர்களால் தேர்வு செய்யப்படவில்லை. இருப்பினும் 'டைம்' வாசகர்கள் அவரை சிறந்த மனிதராக தேர்வு செய்தனர். டைம் வாசகர்கள் பதிவு செய்த 5 லட்சம் வாக்குகளில் 16% மோடிக்கு ஆதரவாக பதிவாகியிருந்தன" எனக் கூறியுள்ளது.
அம்பானி பற்றி விவரித்துள்ள 'டைம்' இதழ், "இந்தியாவின் முதல் பணக்காரரான அம்பானி டெலிகாம் நிறுவனம் முதல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மையம் வரை பல்வேறு தொழில்களை நிர்வகித்து வருகிறார். அவருடன் சமவாய்ப்புள்ள போட்டியாளராக இருக்கிறார் நைஜீரிய அதிபர் முகமது புஹாரி" எனத் தெரிவித்துள்ளது. இவர்களைத் தவிர கூகுளின் சுந்தர் பிச்சையும் போட்டியாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி 50 போட்டியாளர்களில் பிரதமர் நரேந்திர மோடி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் தலா 1.3% வாக்குகளைப் பெற்றுள்ளனர்.