பொருளாதாரத்தை மத்திய அரசும், இடதுசாரிகளும் பலவீனமாக்கிவிட்டார்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாலக்காடு நகரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காட்சி: படம் | ஏஎன்ஐ.
பாலக்காடு நகரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காட்சி: படம் | ஏஎன்ஐ.
Updated on
1 min read

நாட்டின், கேரள மாநிலத்தின் பொருளாதாரத்தை மத்திய அரசும், இடதுசாரிகளும் சேர்ந்து பலவீனமாக்கிவிட்டார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார்.

கேரள மாநிலத்தில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனுத் தாக்கல், பரிசீலனை, திரும்பப் பெறுதல் அனைத்தும் முடிந்து இறுதி செய்யப்பட்டதையடுத்து, தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று பாலக்காடு, மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

பாலக்காட்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:


''பண மதிப்பிழப்பு, மோசமாக உருவாக்கப்பட்ட ஜிஎஸ்டி ஆகியவற்றால் நாட்டின் பொருளாதாரமும், கேரள மாநிலத்தின் பொருளாதாரமும் பலவீனமாக இருக்கின்றன. பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுவருவதில் மத்தியில் ஆளும் பாஜக அரசும், மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடதுசாரி அரசும் தோல்வி அடைந்துவிட்டன.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நினைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசின் செயல்பாடு என்பது, பெட்ரோல் இல்லாமல் காரை ஸ்டார்ட் செய்வதுபோல் இருந்தது. பொருளாதாரத்தில் நாம் பணத்தைச் செலுத்த வேண்டும். நாங்கள் எங்களின் நியாய் திட்டத்தை அறிமுகப்படுத்த முயன்றபோது, பலரும் இது வீணான திட்டம் என்றனர். ஆனால், எங்கள் திட்டத்தால் பொருளாதாரம் ஊக்கம் பெறுகிறது என்பதை உணர்ந்து பின்னர் ஏற்றுக்கொண்டனர்.

குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்யும் நியாய் திட்டம் பொருளாதாரத்தில் பணத்தைச் செலுத்தி, சாமானிய மக்களின் வாங்கும் சக்தியை அதிகப்படுத்தலாம். உற்பத்தித் துறையையும் ஊக்கப்படுத்த முடியும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்''.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in