

கேரளாவில் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடத்த தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் வாக்காளர் பட்டியலில் போலி பெயர்கள் பெருமளவு சேர்க்கப்பட்டு கள்ள வாக்குகள் செலுத்த ஆபத்து இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்தான் கடுமையான போட்டி இருந்து வருகிறது. பாஜக தனித்து போட்டியிடுகிறது.
இந்தநிலையில் வாக்காளர் பட்டியலில் போலி பெயர்கள் பெருமளவு சேர்க்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவரும், கேரள மூத்த காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னிதலா கூறியதாவது:
கேரளாவில் அண்மையில் வெளியாகியுள்ள வாக்காளர் பட்டியலில் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளன. ஒரே நபரின் உருவப்படும் வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் வெவ்வேறு தொகுதிகளில் உள்ளன. போலியான முகவரிகள் கொடுத்து அவர்களது பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் போலி வாக்காளர் அட்டைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி கள்ள வாக்குகள் செலுத்தப்படும் ஆபத்து உள்ளது. திட்டமிட்ட சதி நடைபெறுகிறது.
இதற்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். தேர்தல் ஆணையம் விரைந்து செயல்பட வேண்டும். போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.