

கேரளாவில் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடத்தப்படுவதாக இருந்த நிலையில், திடீரென தேர்தல் ஆணையம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஐயுஎம்எல் கட்சியின் எம்.பி. அப்துல் வஹாப், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி., கே.கே.ராகேஷ், காங்கிரஸ் கட்சியின் சார்பில் வயலார் ரவி ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிகிறது.
இந்த 3 இடங்களுக்கான தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கேரள சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவிக் காலம் ஏப்ரல் 6-ம் தேதி முடியும் நிலையில், பதவிக்காலம் முடியும் எம்எல்ஏக்கள் மூலம் ஏப்ரல் 12-ம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடத்த வேண்டுமா என்று சட்ட அமைச்சகம் தேர்தல் ஆணையத்துக்குக் கேள்வி எழுப்பியுள்ளது. இதையடுத்து, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், "கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், சட்ட அமைச்சகம் சில ஆலோசனைகள் வழங்கியதையடுத்து, தேர்தல் அறிவிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது, தேர்தல் நடத்தும் தேதி பின்னர் புதிதாக அறிவிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் அதாவது புதிய எம்எல்ஏக்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. ஆனால், மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஏப்ரல் 12-ம் தேதி நடக்கிறது. பதவிக்காலம் முடிந்த எம்எல்ஏக்களை வைத்து எவ்வாறு மாநிலங்களவைத் தேர்தலை நடத்து சட்டரீதியாக சாத்தியமா என சட்ட அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "மாநிலங்களவைத் தேர்தல் நடத்தும் பணியைத் தொடங்கிய தேர்தல் ஆணையம் திடீரென நிறுத்திவிட்டது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு, ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது தலையிட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்த உரிமையும் இல்லை. சட்டத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படிதான் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நிறுத்தப்பட்டதற்கான காரணம் என்ன?" எனக் கேட்டுள்ளார்.