இன்று முழுஅடைப்பு போராட்டம்: விவசாய சங்கங்கள் அழைப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

கடந்த ஆண்டு செப்டம்பரில் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டங்களை வாபஸ் பெறக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையே 10 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

கடந்த டிசம்பர் 8-ம் தேதி விவசாய சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின நாளில் டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது பெரும் வன்முறை ஏற்பட்டது.

இதன்பிறகும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

விவசாய சங்கங்களின் கூட்ட மைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக் கையில், "வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு நாட்டு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக பேருந்துகள், ரயில்கள், சந்தைகள், வணிக வளாகங்களின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும்" என்று கோரப் பட்டுள்ளது.

காங்கிரஸ், தேசியவாத காங் கிரஸ் உட்பட 24 எதிர்க்கட்சிகள் முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் காரணமாக பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் முழுஅடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அடுத்த கட்டமாக வரும் 28-ம் தேதி வேளாண் சட்டங்களின் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in