

கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமாரை ஆதரித்து, கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி நேற்று பிரச்சாரம் செய்தார். ராமநாதபுரம், ஒலம்பஸ், உக்கடம், சிவானந்தா காலனி பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று, மலையாளத்திலும், தமிழிலும் பேசி ‘கை’ சின்னத்துக்கு வாக்களிக்கும்படி பொதுமக்களிடம் அவர் வேண்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் உம்மன் சாண்டி கூறியதாவது: கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யூடிஎப்) கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பா.ஜ.கவால் யூடிஎப் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கேரளாவில் பா.ஜ.க - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே ரகசிய உடன்பாடு உள்ளது.
அங்கு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி பாலசங்கரின் பேச்சு இதை உறுதிப்படுத்தும்படியாக இருக்கின்றது. காங்கிரஸ் எல்லா வகையிலும் பா.ஜ.கவை எதிர்த்து வருகிறது. கேரள தங்கக் கடத்தல் விவகாரம் புலனாய்வுத் துறை அமைப்புகளின் விசாரணையில் இருக்கிறது. இவ்வாறு உம்மன் சாண்டி கூறினார்.