

கேரளத்தில் எளிமையான குடும்பப் பின்னணி கொண்டவர்களை மார்க்சிஸ்ட் கட்சிதான் அதிக அளவில் வேட்பாளர்களாக நிறுத்திவந்தது. அதிலும் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இளம்பெண்வேட்பாளர்களை களம் இறக்கி மார்க்சிஸ்ட் அதிகளவில் வெற்றியைக் குவித்தது. உள்ளாட்சித் தேர்தல் தோல்வியில் இருந்து பாடம் படித்திருக்கும் காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் இளம் வயதினர் சிலருக்கும் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது.
அதேநேரம் காங்கிரஸ் கட்சி மொத்தமாக பத்து பெண்களுக்குக் கூட போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை பட்டியலிட்டு காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிரணி தலைவி லத்திகா சுபாஸே கட்சியைவிட்டு வெளியேறினார்.
பி.சி.சாக்கோ உள்ளிட்ட மூத்த தலைவர்களும் காங்கிரஸை கை கழுவிவிட்டு சென்ற நிலையில்தான் வேட்பாளர் தேர்வில் சில அதிசயங்களையும் நிகழ்த்தியிருக்கிறது காங்கிரஸ் கட்சி.அதில் காயங்குளத்தில் போட்டியிடும் அரிதா பாபு முக்கியமானவர்.
கேரளத்தில் பிரதான கட்சிகளின் சார்பில் களத்தில் இருப்பதிலேயே மிகவும் இளையவரான அரிதா பாபுவுக்கு இப்போது 27 வயது தான் ஆகிறது.
அரிதா பாபு கால்நடைகளை வளர்த்து பால் கறந்து விற்று தன் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். அப்படியான சூழலிலும் காங்கிரஸின் போராட்டங்களிலும் கலந்து கொள்ள அரிதா பாபு தயங்கியதில்லை. உள்ளூர் பகுதி வாசிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதிலும் தனிக்கவனம் செலுத்துகிறார்.
வறுமையான குடும்பப் பின்னணியில் இருந்தாலும் தனது தந்தை காங்கிரஸ்காரர் என்பதால் அவரோடு சிறு வயதில் இருந்தே பொதுக்கூட்டங்களுக்குப்போய் காங்கிரஸில் பிடிப்புள்ளவராக மாறினார் அரிதா பாபு. 21 வயதிலேயே ஆலப்புழா மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராகவும் வெற்றி பெற்றிருந்தார். கடந்த 2015-ல் கேரளத்தின் இளம்வயது உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதியாக ஊடக வெளிச்சம் பாய்ச்சப்பட்டார். இப்போது அவரது எளிய குடும்பப் பின்னணியால் காங்கிரஸ் கட்சியே மாதிரி வேட்பாளர் என பெருமையோடு அறிவித்துவிட்டு களம் இறக்கியுள்ளது. அரிதா பாபு, இளைஞர் காங்கிரஸில் தாலுகா பொதுச் செயலாளராக உள்ளார்.
அரிதா பாபு இந்து தமிழ் திசையிடம் கூறுகையில், ‘‘15 வருடங்களாக இந்தத் தொகுதி சி.பி.எம். வசம் இருக்கிறது. எந்தவளர்ச்சிப் பணியும் இங்கு நடக்கவில்லை. காயங்குளத்தில் சுற்றுலா துறையை வளர்ச்சியடையச் செய்வதன் மூலம் ஏராளமானஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்.காயங்குளத்தில் தனி தாலுகா வேண்டும் என்னும் கோரிக்கையும் இருக்கிறது. அதையும் செய்து கொடுப்பேன். வயது குறைவாக இருந்தாலும் ஏற்கனவே 5 ஆண்டுகள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக இருந்த அனுபவம் உள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வெளிப்படை தன்மை இல்லை. மதிப்பெண் எடுத்த பலரும் வேலைக்காக போராடுகின்றனர்.அதன் வெளிப்படைத்தன்மைக்குப் பாடுபடுவேன். மக்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள்’என்றார்.
வெற்றிவாய்ப்பு சாத்தியமா?
காயங்குளம் தொகுதியில் இப்போது பிரதீபா ஹரி எம்.எல்.ஏ.வாக உள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த இவர்கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் 11,800 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்தத்தொகுதியில் இதுவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் இவர்தான். எல்.டி.எப் கூட்டணி கடந்த 15 ஆண்டுகளாக இந்தத் தொகுதியை தக்கவைத்து வருகிறது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு வலுவான வாக்கு வங்கியுள்ள காயங்குளம் தொகுதியில் எளிய வேட்பாள்ரை களம் இறக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளது காங்கிரஸ். ஆனாலும் காங்கிரஸ் கட்சியின் இந்த வியூகம் பலிக்குமா என்பது தேர்தல் முடிவில் தான் தெரியும்.