

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் மூடப்படாத ஆழ் துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை, மீட்புக் குழுவினர் 24 மணி நேர போராட் டத்துக்குப் பிறகு நேற்று சடலமாக மீட்டனர்.
மேடக் மாவட்டம் புல்கல் மண்டலம் பொம்மாரெட்டி கூடம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கும்மரி ராயுலு, மொகிலம்மாள் தம்பதிக்கு பாலய்யா (5), ராகேஷ் (3) ஆகிய இரண்டு மகன்கள். இவர்கள் இருவரும் தங்களது வீட்டுக்கருகே நேற்று முன்தினம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் இருந்த மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் ராகேஷ் தவறி விழுந்துள்ளான். இதை அறிந்த ராகேஷின் பெற்றோர், புல்கல் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார், வருவாய் துறை அதிகாரிகள், தீயணைப்பு படை யினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்தனர். கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்ததில், ராகேஷ் 33 அடி ஆழத்தில் தலைகீழாக சிக்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து 3 ஜேசிபி மற்றும் 2 பொக்லைன் இயந்திரங் கள் உதவியுடன் ஆழ்துளை கிணற்றின் அருகில் குழி தோண் டினர். இதனிடையே, மருத்துவக் குழுவினர் ஆழ்துளை கிணற்றுக் குள் குழாய் மூலம் ஆக்ஸிஜனை செலுத்தினர்.
இரவு முழுவதும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றது. 24 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ராகேஷை மீட்புக் குழுவினர் நேற்று சடலமாக மீட்டனர். குழந்தையின் சடலத்தைப் பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.