Published : 25 Mar 2021 06:48 PM
Last Updated : 25 Mar 2021 06:48 PM

இந்தியாவில் கரோனா 2-வது அலை 100 நாட்கள் நீடிக்கும்; ஏப்ரல் மாதம் உச்சம்: எஸ்பிஐ ஆய்வில் தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் 2-வது அலை பிப்ரவரி மாதமே தொடங்கிவிட்டது. இது ஏப்ரல் நடுப்பகுதியில் உச்சமடையும். 100 நாட்கள் வரை 2-வது அலை நீடிக்கும் என எஸ்பிஐ வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் மெல்ல அதிகரித்து வந்தது. மார்ச் மாதத்திலிருந்து மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் கரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 53 ஆயிரத்து 364 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த 132 நாட்களில் இதுதான் அதிகபட்சமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 275 பேர் உயிரிழந்ததையடுத்து, 1,60,441 பேர் உயிரிழந்தனர். தற்போது நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,68,457 ஆக அதிகரித்துவிட்டது.

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவல் குறித்து எஸ்பிஐ வங்கியின் ஆய்வுக்குழு ஆய்வறிக்கை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை பிப்ரவரி 15-ம் தேதி அளவில் உருவாகியுள்ளது. 2-வது அலை அடுத்த 100 நாட்களுக்கு நீடிக்கும். தற்போது கரோனா வைரஸ் நாட்டில் அதிகரித்து வரும் நிலையை வைத்துக் கணக்கிடும்போது, இந்த அலை ஏப்ரல் 2-வது வாரத்தில் உச்சத்தை அடையும். இந்த 2-வது அலையில் ஏறக்குறைய 25 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பாதிப்புகள் பெரும்பாலும் நகர்ப்புறங்களில்தான் அதிகமாக இருந்து வருகிறது. அங்குதான் அதிகரித்துவருகிறது. அதிலும் 15 மாவட்டங்களில்தான் கரோனா தொற்று அதிகமாகவும், உயிரிழப்பு அதிகரித்தும் காணப்படுகிறது.

இதில் நல்ல அம்சம் என்னவென்றால் நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக உயராமல் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் உயராமல் நீடித்து வருகிறது.

உலக அளவில் எடுக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையில், கரோனா வைரஸின் முதல் அலையை விட, 2-வது அலையின் தீவிரம் அதிகமாக இருக்கும். ஆனால், தற்போது நம்மிடம் கரோனா தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், சூழலைச் சிறப்பாக நம்மால் எதிர்கொள்ள முடியும். ஆதலால், நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்.

குஜராத், கேரளா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், ஹரியாணாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிகமாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால், தமிழகம், பஞ்சாப், ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்குக் குறைந்த சதவீதத்திலேயே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆதலால், கரோனா தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்.

நம் நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளின்படி கணக்கிட்டால் நாள்தோறும் ஒரு கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த முடியும். தற்போது 34 லட்சம் பேருக்கு மட்டுமே நாள்தோறும் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது கோவாக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் நாள்தோறும் 52 லட்சம் மருந்துகள் தயாரிக்கப்பட்டு, ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது.

தற்போதுள்ள சூழலில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை நாள்தோறும் 34 லட்சமாக இருக்கிறது. இது நாள்தோறும் 40 முதல் 45 லட்சமாக அதிகரிக்கப்படும் பட்சத்தில், அடுத்த ஓராண்டு 9 மாதங்களில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திவிட முடியும். 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் 4 மாதங்களில் தடுப்பூசி செலுத்தி முடிக்கலாம்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x