

மகாராஷ்ராவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
நாடுமுழுவதும் கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து. இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.
கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
மகாராஷ்டிராவின் புனே, அமராவதி மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. யவத்மால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
நாக்பூரில் முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகஅளவில் காணப்படுகிறது. அங்கும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நாடுமுழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் பீதியடைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று காலை 7 மணி வரை, 8,61,292 முகாம்களில் 5.31 கோடி (5,31,45,709) பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
79,80,849 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 50,61,790 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 84,78,478 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்), 2,37,381 முன்கள ஊழியர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), இதர உடல் உபாதைகள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 51,31,949 பேருக்கும் (முதல் டோஸ்), 60 வயதைக் கடந்த 2,32,55,262 பயனாளிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மகாராஷ்ராவில் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தலைநகர் நகர் மும்பை உட்பட பல நகரங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.