சிறுபான்மையினரின் வாக்குகளை அபகரிக்க பாஜக ஆதரவுடன் புதிய அரசியல் கட்சி: மம்தா பானர்ஜி தாக்கு

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி : கோப்புப்படம்
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி : கோப்புப்படம்
Updated on
2 min read

மாநிலத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளை அபகரிக்க பாஜக ஆதரவுடன் புதிய கட்சி இந்தத் தேர்தலில் முளைத்துள்ளது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி சாடினார்.

எந்தக் கட்சியின் பெயரையும், எந்தத் தலைவரின் பெயரையும் மம்தா பானர்ஜி குறிப்பிடவில்லை என்ற போதிலும், முஸ்லிம் மதகுரு அப்பாஸ் சித்திக்கின் இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சியைத்தான் குறிப்பிட்டார் என்பது தெளிவாகிறது.

இந்தத் தேர்தலில் இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சி, காங்கிரஸ் -இடதுசாரிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இந்தத் தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிகிறது.

இதற்கிடையே தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''மாநிலத்தில் சிறுபான்மையினர் வாக்குகளை அபகரிக்கச் செய்வதற்காக பாஜக ஆதரவுடன் ஒரு புதிய கட்சி உருவாகியுள்ளது. இந்தக் கட்சி பாஜகவுக்குத்தான் உதவுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட பாஜகவுடன் புரிந்துணர்வுடன் செயல்படுகின்றன.

மாநிலத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்ஆர்சி ஆகியவற்றை நடைமுறைப்படுத்தாமல் தடுக்க திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் மட்டும்தான் முடியும். பல்வேறு சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழ எங்கள் ஆட்சியில்தான் முடியும்.

என்னைக் கொலைகாரி, கொள்ளைக்காரி என்றெல்லாம் பேசுகிறார்கள். ஏனென்றால் நான் மக்களை நேசிக்கிறேன். எப்போது மக்களுக்கு என்ன தேவையென்றாலும் ஓடிச் சென்று உதவி செய்கிறேன்.

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் திருடர்களின் கடவுள்கள். லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு பிஎஃப் நிதி நிலுவையில் இருக்கிறது. ஏராளமான பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் அம்பான் புயலில் ரூ.1 லட்சம் கோடிக்குச் சேதம் ஏற்பட்டது. ஆனால், பிரதமர் மோடி, ரூ.1,000 கோடியைக் கொடுத்துவிட்டு இதுதான் உதவி என்றார். ஆனால், இந்த ஆயிரம் கோடியும் யாருடைய பணம், மாநில அரசின் பணம். மத்திய அரசு மாநிலத்துக்கு ஆதரவாக ஏதும் செய்யவில்லை.

புல்புல் புயல் வந்ததிலிருந்து அம்பான் புயல்வரை மக்கள் பாதிக்கப்பட்டபோது நான் ஓடிவந்து உதவி செய்தேன். மக்கள் உயிர் பறிபோகாமல் கண்காணித்தேன். வீட்டில் அமர்ந்து எந்தப் பணியையும் கண்காணிக்கவில்லை. அம்பான் புயலில் இருந்து மாநில அரசு 19 லட்சம் மக்களைப் பாதுகாத்தது''.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in