Last Updated : 25 Mar, 2021 03:56 PM

 

Published : 25 Mar 2021 03:56 PM
Last Updated : 25 Mar 2021 03:56 PM

அசாமில் 27-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு; இன்றுடன் பிரச்சாரம் முடிகிறது: 47 தொகுதிகளும் பாஜகவுக்கு கடும் சவால்

அசாம் மாநிலத்தில் 47 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 27-ம் தேதி நடைபெறுவதையடுத்து, இன்று மாலை 5 மணியுடன் அனைத்துக் கட்சிகளும் பிரச்சாரத்தை முடிக்கின்றன.

அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக 47 தொகுதிகளுக்கு வரும் 27-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த 47 தொகுதிகளும் அசாம் மாநிலத்தின் அப்பர் அசாம் மண்டலத்தில் உள்ளது.

இந்த 47 தொகுதிகளில் 42 இடங்கள் அப்பர் அசாம், வடக்கு அசாமில் உள்ள 11 மாவட்டங்களிலும், மத்திய அசாமின் நாகோன் மாவட்டத்தில் 5 தொகுதிகளும் வருகிறது.

2016-ம் ஆண்டு தேர்தலில் பாஜக, ஏஜிபி கட்சியுடன் கூட்டணி அமைத்து 47 தொகுதிகளில் 35 இடங்களை வென்றது. இதில் பாஜக மட்டும் 27 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் மட்டுமே வென்றது.

47 தொகுதிகளிலும் 260 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 101 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள், 41 வேட்பாளர்கள் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

அசாமில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் வலுவாக நடந்தபோது, இந்த அப்பர் அசாம் பகுதியில்தான் போராட்டம் தீவிரமடைந்தது. இந்தத் தொகுதியில் பாஜக வெல்ல வேண்டும் என்பதற்காக 5 தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களை பிரதமர் மோடியை வைத்து நடத்தியுள்ளது.

அப்பர் அசாம் பகுதி மக்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இருப்பதால், இந்தச் சட்டத்தை வரவிடாமல் தடுப்போம், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்துவோம் என்று காங்கிரஸ் கட்சி இங்கிருக்கும் மக்களுக்கு வாக்குறுதியளித்து தேர்தலை எதிர்கொள்கிறது.

அசாம் பாஜக தலைவர் ரஞ்சித் குமார் தாஸ் கூறுகையில், "மாநிலத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என நம்புகிறேன். இந்தத் தேர்தலில் சிஏஏ சட்டம் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. மக்கள் பிரச்சினை அடிப்படையில்தான் வாக்களிப்பார்கள். உணர்வுரீதியாக வாக்களிக்க மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.

ஆனால் 47 தொகுதிகளிலும் என்ஆர்சி, சிஏஏ, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, வெள்ளம் வந்தபோது நிவாரண உதவி அளிக்காதது, மண் அரிப்பு பிரச்சினைகளைத் தீர்க்காதது போன்றவை முக்கியப் பிரச்சினைகளாகப் பார்க்கப்படுகிறது.

இந்த அப்பர் அசாம் பகுதியில் உள்ள வாக்காளர்களில் 30 சதவீதம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் என்பதால், அவர்களின் வாக்கு இந்த 47 தொகுதிகளிலும் வெற்றியை முடிவு செய்யும் துருப்புச்சீட்டாக அமையும்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்த 47 தொகுதிகளில் பிரச்சாரம் செய்தபோது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கூலி ரூ.365 ஆக உயர்த்தப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

2-வது கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 39 தொகுதிகளுக்கும், 3-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி 40 தொகுதிகளுக்கும் நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x