

மாநிலத்துக்கு நல்லத் திட்டங்கள் தேவையென்றால், பிரதமர் மோடியை மனதில் வைத்து பாஜகவுக்கு வாக்களியுங்கள், ஊழலை நீங்கள் விரும்பினால், மம்தாவைத் தேர்ந்தெடுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
ஆட்சியை மூன்றாவது முறையாகத் தக்கவைக்கும் முயற்சியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது, பாஜகவுக்கும் பதிலடி கொடுத்து பிரதமர் மோடி, அமித் ஷா என முக்கியத் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புருலியா மாவட்டத்தில் உள்ள பாகமுந்தியில் இன்று பாஜக சார்பில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான அரசு 10 ஆண்டுகள் ஆட்சி செய்தும் எந்த வேலைவாய்ப்பையும் உருவாக்கவில்லை. கார் நிறுவனங்களை திரிணமூல் காங்கிரஸ் அரசு துரத்திவிட்டு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்காமல் இருக்கிறது.
உங்களுக்கு நல்லத் திட்டங்கள் தேவையென்றால் பிரதமர் மோடியை மனதில் வைத்து பாஜகவுக்கு வாக்களியுங்கள். ஊழலை நீங்கள் விரும்பினால், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள். இதை நீங்களே முடிவு செய்யுங்கள். மேற்கு வங்க மாநிலத்தி்ன் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி 115 திட்டங்கள் கொண்டுவந்துள்ளார். ஆனால், மம்தா பானர்ஜி 10 ஆண்டுகளில் 115 ஊழல்கள் செய்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் ரூ.18 ஆயிரம் நிலுவைத் தொகை பரிமாற்றம் செய்யப்படும். மாநிலத்தில் தற்போது ஊழல் நிறைந்த அரசு நடந்து கொண்டிருக்கிறது.
ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு, பழங்குடியின மக்களையும், குருமி இனத்தவர்களையும் புறக்கணித்துவிட்டது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தால், பழங்குடியினத்தவர், குருமி இனத்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தரப்படும்.
பழங்குடியின மக்கள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெறவில்லை. அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களையும் மத்திய அரசின் பட்டியலில் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலை பெற்றுத் தரப்படும்.
குருமி சமூகத்தில் உள்ள குழந்தைகளுக்கு 10ம்வகுப்பு வரை அவர்கள் மொழியிலேயே பாடங்களை இலவசமாகப் படிக்கலாம். புர்லியா பகுதியில் இயல்பாகவே ப்ளேரோடு கலந்த நீர்தான் கிடைக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால், மக்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்கப்படும். ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் புர்லியா மாவட்டத்தில் குடிநீர் சுத்திகரிக்கும் திட்டத்தைக் கொண்டுவருவோம். ஆனால், மம்தா இந்த சுகாதாரமில்லாத குடிநீரைத்தான் உங்களைக் குடிக்கக் கட்டாயப்படுத்துகிறார்.
இந்த மாவட்டத்தில் உள்ள ஜங்கிலிமஹால் பகுதியில் உறுதியாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டித்தரப்படும். மக்கள் டெங்கு, மலேரியாவிலிருந்து பாதுகாக்கும் வகையில் சுகாதார வசதி மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.