

5 மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் இன்று ஒத்தி வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கரோனா வைரஸ் பரவல் மற்றும் 5மாநிலத் தேர்தலில் எம்.பி.க்கள் பிரச்சாரம் செய்ய இருப்பதால் முன்கூட்டியே இன்று முடிக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை இரு அமர்வுகளாக நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் அமர்வு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ம் தேதி வரையிலும், 2-வது அமர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, குடியரசுத் தலைவர் உரையுடன் ஜனவரி 29-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் இரு அவைகளிலும் நடந்தது. பட்ஜெட் மீதான விவாதங்களும் இரு அவைகளிலும் நடந்தன. முதல் அமர்வில் மக்களவை 99.5 சதவீதம் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டது என்றும், 50 மணி நேரம் கூட்டத்தொடரை நடத்தத் திட்டமிடப்பட்டதில் 49 மணி நேரம் 17நிமிடங்கள் கூட்டத்தொடர் நடந்தது என்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த 8ம் தேதி தொடங்கியது. வாரத்தின் இறுதி நாட்கள் நடத்தப்படாமல் 5 நாட்கள் மட்டும் அவை நடந்தது. அதுமட்டுமல்லாமல் வழக்கம் போல் இரு அவைகளும் காலையில்தான் தொடங்கி நடந்தன.
தற்போது 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக, காங்கிரஸ், திமுக,அதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்ல இருப்பதால், கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர்.
மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோரை பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் சந்தித்து கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்கக் கேட்டுக்கொண்டனர். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுதிப் பந்த்யோபத்யாயே, டெரீக் ஓ பிரையன் ஆகியோர் மக்களவை சபாநாயகருக்கும், மாநிலங்களவைத் தலைவருக்கும் கடிதம் எழுதிக் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க வலியுறுத்தி இருந்தனர்.
இதை ஏற்றும், கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவருவதைக் கருத்தில் கொண்டும், மக்களவை இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவையும் பிற்பகலில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.