

ஆர்எஸ்எஸ் அமைப்பை இனி சங் பரிவார் என அழைக்க முடியாது, அது பொருத்தமானதாக இருக்காது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்திலிருந்து கன்னியாஸ்திரிகள் சிலர் கடந்த 19-ம் தேதி ஹரித்துவார்-பூரி உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒடிசா மாநிலம் பூரி நகருக்குச் சென்றனர். கடந்த வெள்ளிக்கிழமை ஜான்ஸி நகரில் ரயில் வந்தபோது, ரயிலில் இருந்த பஜ்ரங் தள அமைப்பினர், கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் மத மாற்றம் செயலில் ஈடுபடுகிறார்கள் எனக் கூறி அவர்களைத் துன்புறுத்தி, அவமானப்படுத்தி அவர்களைப் பாதி வழியிலேயே ரயிலில் இருந்து இறக்கிவிட்டனர்.
இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த கன்னியாஸ்திரிகள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, வேறு ரயிலில் அவர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
கன்னியாஸ்திரீகள் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து அறிந்த கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சில், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் நடந்த சம்பவம் தொடர்பாகப் பிரதமர் மோடிக்கும், உ.பி. முதல்வர் ஆதித்யநாத் கவனத்துக்கும் காங்கிரஸ், பாஜக நிர்வாகிகள் கொண்டு சென்றுள்ளனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதியுள்ளார். கேரளாவில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், தவறு செய்தவர்கள் உறுதியாக நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத்தரப்படும் என உறுதியளித்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தற்போது கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் கன்னியாஸ்திரீகள் அவமானப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், " ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்(ஆர்எஸ்எஸ்) அமைப்பை சங்பரிவாரின் ஒருங்கிணைந்த குடும்பத்தைச் சேர்ந்தது என அழைக்கமாட்டேன். குடும்பம் என்றால், பெண்கள் இருப்பார்கள், மூத்தோருக்கு மரியாதை அளிப்பார்கள், கருணை இருக்கும், பாசம், அன்பு இருக்கும்.
ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் இதில் எதுவுமே இல்லை. ஆதலால், ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்பின் குடும்பத்துடன் சேர்ந்தது என அழைப்பது பொருத்தமானது அல்ல. இனிமேல் நான் அப்படி அழைக்கமாட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.