Published : 25 Mar 2021 03:14 AM
Last Updated : 25 Mar 2021 03:14 AM

சுகாதார பணியாளர்களுக்கு தேசிய ஆணையம்: புதிய மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றம்

புதுடெல்லி

சுகாதார பணியாளர்களுக்கான தேசிய ஆணைய மசோதா 2021நேற்று நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது.

சுகாதாரம் சார்ந்த பணிகள், துணை மருத்துவ பணிகளுக்கான படிப்புகள் மற்றும் சேவைகளை தரமாக அளிப்பதற்கு இந்த மசோதா வழிவகை செய்வதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

இந்த மசோதாவின் நலன்குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் வெகுவாக பாராட்டினர். இதுகுறித்து பேசிய அமைச்சர், சுகாதார பணியில் ஈடுபட்டுள்ள வர்களுக்கு புதிய மசோதா உரிய அங்கீகாரம் கிடைக்க வழி வகுக்கும் என்றார்.

சுகாதார பணியாளர்களுக்கான தேசிய ஆணையம் அமைப்பது குறித்த 2021-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ள மசோதா இத்துறை பணியாளர்களின் செயல்பாடு குறித்து மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.

மாநிலங்களவையில் நிறைவேற்றம்

மருத்துவ துணைநிலை பணி யாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் மருத்துவ பணியின் ஒரு அங்கமாவர். டாக்டர்களுக்கு இணையான பங்களிப்பு இவர்களுடையது. இன்னும் சொல்லப்போனால் அவர்களது பணியைவிட இவர்களது பணி மேலானது என்று கூற வேண்டும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே புதிய மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த மசோதா ஏற்கெனவே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுகாதார பணி மற்றும் துணை மருத்துவப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், டெக்னீஷியன்கள், ரேடியோகிராபர், டயடீஷியன் ஆகியோர் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் மிகச் சிறப்பாக பணியாற்றினர். கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள்வதில் டாக்டர்களின் பணிக்கு இணையாக இவர்களது பங்களிப்பும் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மசோதா கொண்டு வருவதன் நோக்கமே, இந்தப் பணிகளில் ஈடுபடுவோருக்கென தகுதிகளை வரையறுத்து அத்தகைய தகுதிபடைத்தவர்கள் இப்பணியில் ஈடுபட வைப்பதே இந்த மசோதாவின் நோக்கம் என்று ஹர்ஷ்வர்தன் கூறினார்.

அனைத்து பணியாளர்களுக்கு மான தகுதி வரையறை, சர்வதேச விதிமுறைகளின்படி வகுக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும்யூனியன் பிரதேசங்களின் பிரதி நிதிகள் ஆணையத்தில் இடம்பெற வழியேற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒவ்வொரு பிரிவுபணியாளர்களுக்கும் தகுதியை வரையறுப்பதற்கு பொதுவான வரம்பு நிர்ணயிக்க வழியேற்படும். மாநிலங்களில் இதற்கான ஆணையம் இதை செயல்படுத்தும். இதன் மூலம் நோயாளிகளை அணுகும் போக்கு ஒரே சீரானதாக இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x