பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் டிஹெச்எப்எல் நிறுவனம் பல ஆயிரம் கோடி மோசடி: சிபிஐ குற்றச்சாட்டு பதிவு

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் டிஹெச்எப்எல் நிறுவனம் பல ஆயிரம் கோடி மோசடி: சிபிஐ குற்றச்சாட்டு பதிவு
Updated on
2 min read

மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் (பிஎம்ஏஒய்) அனைவருக்கும் வீடு கட்டித் தரும் திட்டம் கீழ் போலி ஆவணங்கள் மூலம் டிஹெச்எப்எல் நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள டிஹெச்எப்எல் நிறுவனத்தின் மேம்பாட்டாளர்களான கபில்வாத்வான் மற்றும் தீரஜ் வாத்வான் ஆகியோர் தற்போது மோசடி வழக்கு தொடர்பாக சிறையில் உள்ளனர்.

இது தொடர்பாக நேற்று விசாரணை நடத்திய சிபிஐ, கபில் மற்றும் தீரஜ் வாத்வான் ஆகிய இருவரும் போலியான பெயர்களில் ரூ. 14 ஆயிரம்கோடி வீட்டுக் கடன்வழங்கியதாகக் கூறி இதற்காகரூ.1,880 கோடி வட்டி சலுகையை மத்திய அரசிடமிருந்து பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்களுக்காக (இடபிள்யூஎஸ்) வீடு கட்டித் தருவது இத்திட்டம் ஆகும். இதன்படிகடன் வசதியுடன் வட்டி மானியம் வழங்குவதற்காக பிஎம்ஏஒய் திட்டம் உருவாக்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் மானிய சலுகைகளை வீட்டுக் கடன் வழங்கிய நிறுவனங்கள் அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்து மத்திய அரசிடமிருந்து வட்டி மானியம் பெறும். இதன்படி டிஹெச்எப்எல் நிறுவனம் டிசம்பர் 2018-ம்ஆண்டு 88,651 வீட்டுக் கடன் வழங்கியதற்கான ஆவணத்தை தாக்கல் செய்து ரூ. 539.40 கோடியை வட்டி மானியமாக பெற்றுள்ளது. இது தவிர ரூ. 1,347 கோடி நிலுவை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக கணக்கு தணிக்கை செய்த போது கபில் மற்றும் தீரஜ் வாத்வான் ஆகிய இருவரும் 2.6 லட்சம் மோசடி வீட்டுக் கடன் கணக்குகளை உருவாக்கியிருப்பதும் இவற்றில் பலபிஎம்ஏஒய் திட்டத்தின் கீழ் மானியம் பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் நிறுவனத்தின் பாந்த்ரா கிளை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2007-ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையான காலத்தில் ரூ.14,046 கோடி தொகை இந்தக்கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இதில் ரூ. 11,755 கோடி பல போலி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வாத்வான் சகோதரர்கள் மீதும் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதில் டிஹெச்எப்எல் நிறுவனத்தில் ராணா கபூர் முதலீடு செய்து ஆதாயமடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த மோசடியானது 2018-ம்ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் நடைபெற்றுள்ளது. இந்த காலத்தில் ரூ. 3,700 கோடியை யெஸ் வங்கி டிஹெச்எப்எல் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளது. இதற்கு பலனாக ரூ. 600 கோடியை வாத்வான் சகோதரர்கள் ராணா கபூர் மற்றும் அவரது மனைவி மற்றும் மகள் நிர்வகிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம்ராணா கபூர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in