

மேற்குவங்க தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மண்ணின் மைந்தரே முதல்வராக அறிவிக்கப் படுவார் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 27-ம் தொடங்கி எட்டுக் கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சார்பிலும், பிரதான எதிர்க்கட்சியான பாஜக சார்பிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், புர்பா மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள கந்தி பகுதியில் பாஜக சார்பில் நேற்று பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மோடி பேசியதாவது:
தேர்தல் நெருங்க நெருங்க முதல்வர் மம்தாவுக்கு தோல்வி பயம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. முதலில், பாஜகவை அவர் மதவாத சக்தி, பிரிவினைவாத சக்தி என்று விமர்சித்தார். அவரது கருத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பாஜகவை வளர்ச்சிக்கான கட்சியாகவே மேற்கு வங்க மக்கள் பார்க்கின்றனர். இதனை உணர்ந்த மம்தா, தற்போது பாஜக மீது வேறு மாதிரியான விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்.
அதாவது, பாஜகவினர் வெளியாட்கள் என அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். ஜாதியாகவும், மதமாகவும் பிரிந்து கிடந்த நம் நாட்டை 'வந்தே மாதரம்' என்ற மந்திரச் சொல் 'பாரதம்' என்ற ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தது. இந்த சொல் மேற்கு வங்கத்தில் உருவானது. எனவே, இந்தியர்கள் யாரையும் மேற்கு வங்க மக்கள் வெளியாட்களாக கருத மாட்டார்கள். இந்தியர்கள் என்றுமே மேற்கு வங்க மண்ணுக்கு அந்நியப்பட்டவர்கள் கிடையாது. தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இந்த மண்ணின் மைந்தரே முதல்வராக அறிவிக்கப்படுவார்.
மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் வருவதற்கான காலம் கனிந்துவிட்டது. அராஜகத்தாலும், அடக்குமுறைகளாலும் மக்களை ஒடுக்கி வந்த திரிணமூல் காங்கிரஸுக்கு இந்த தேர்தலுடன் மக்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். திரிணமூல் ஆட்சிக்கு வந்தால், மக்களின் வீட்டு வாசல்களில் அரசாங்கம் செயல்படும் என மம்தா கூறி வருகி றார். ஆனால், இந்த தேர்தலுடன் அவரை வீட்டுக்கே அனுப்ப மக்கள் தயாராகி விட்டார்கள்.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி மலர்ந்ததும், அனைத்து திட்டங்களும் மக்களை நேரடியாக சென்று சேரும். இடையில் யாருக்கும் யாரும் பணம் கொடுக்க தேவையில்லை. மேற்கு வங்க மக்கள் இனி வெளிப்படையான ஆட்சி நிர்வாகத்தை பார்க்க போகிறார்கள். இந்த தேர்தலில் மக்கள் ஆசியுடன் பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி பெறும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.