Published : 25 Mar 2021 03:14 AM
Last Updated : 25 Mar 2021 03:14 AM

இடதுசாரிகளை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பது கேரளாவுக்கு ஆபத்து: காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி பேச்சு

கேரள தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி கூறியதாவது:

கேரளாவை ஆளும் இடதுசாரிகள் தலைமையிலான இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) ஊழல்களால் மலிந்து கிடக்கிறது. அமைச்சர்கள் மீது ஊழல், முதல்வர் அலுவலகம் மீது தங்கக் கடத்தல் புகார் என ஊழல்கள் நிறைந்த அரசாக உள்ளது. மேலும் சபரிமலை ஐயப்பன் விவகாரத்தில் எல்டிஎஃப்அரசு நடந்துகொண்ட விதம் மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் அரசும், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் ஒரே பறவையின் இறக்கைகள் போன்றவை.

இடதுசாரிகள் அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால் கேரளா வுக்கு ஆபத்தாக முடியும்.

சபரிமலை ஐயப்பன் விவகாரத்தில் மற்ற கட்சிகளின் பேச்சை அன்று முதல்வர் பினராயி விஜயன் கேட்கவில்லை. பெண் சமூக நல செயல்பாட்டாளர்களை கோயில் சன்னிதானத்துக்குள் போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். தடுத்த பக்தர்களைத் தாக்கினர். இதன்மூலம் சபரிமலை ஐயப்பன் கோயில் வழிபாட்டு முறைகளை அவர்கள் தகர்த்தெறிந்தனர்.

இதை கேரள மக்கள் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். கேரள வாக்காளர்கள் இதற்கு தக்க பதிலை தேர்தல் மூலம் பினராயி விஜயனுக்கு அளிப்பார்கள்.

தற்போது கேரளாவில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. வழக்கமாக பிஎஸ்சி மூலமாக ஆட்களை அரசு பணியில் அமர்த்துவார்கள். ஆனால் தற்போது இடதுசாரி அரசோ கட்சிக் காரர்களை பின்வாசல் வழியாக அமர்த்தி வருகிறது.

என்ன ஆனாலும் பினராயி விஜயன் தலைமையிலான இடது சாரிகள் அரசு மீண்டும் ஆட்சியில் அமரக்கூடாது.

பாஜகவுக்கு இடம் இல்லை

அதேபோல் பாஜகவுக்கும் இங்கு இடம் கிடைக்காது. கேரளமண்ணுக்கு பாஜக உகந்ததாக இருக்காது. கேரளாவின் கலாச்சாரம் வேறு. பாஜக கலாச்சாரம் வேறு. கடந்த முறை நெனோம் தொகுதியில் பாஜகவுக்கு வாய்ப்பளித்து விட்டனர். அந்த தவறு மீண்டும் நடக்காது. இவ்வாறு ஏ.கே.அந்தோணி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x