சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றில் கேரளாவில் முதல் முறையாக திருநங்கை போட்டி

அனன்யா குமாரி
அனன்யா குமாரி
Updated on
2 min read

கேரள சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக வெங்கரா தொகுதியில் திருநங்கை ஒருவர் போட்டியிடுகிறார்.

கேரளாவைச் சேர்ந்தவர் அனன்யா குமாரி அலெக்ஸ் (28), வானொலி வர்ணனையாளர், ஒப்பனைக் கலைஞர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். திருநங்கையான இவர், பாலின சமத்துவத்துக்காக தொடர்ந்து போராடி வருகிறார். ஜனநாயக சமூக நீதிக் கட்சி சார்பில் வெங்கரா தொகுதியில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் குஞ்சாலிக் குட்டியும் போட்டியிடுகிறார். குஞ்சாலிக்குட்டி ஏற்கெனவே கடந்த 2016-ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.தொடர்ந்து 2019-ம் ஆண்டு மலப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதனால் வெங்கரா தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அதிலும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியே வெற்றி பெற்றது.

இந்நிலையில் மீண்டும் இதே தொகுதியில் நிற்கிறார் குஞ்சாலிக் குட்டி. அவருக்கென சொந்த செல்வாக்கு அதிகம் உள்ள இத்தொகுதியில் மூன்றாம் பாலினத்தவரான அனன்யா குமாரி அலெக்ஸ் களம் இறங்கியிருப்பது கவனத்தைக் குவித்துள்ளது.

அனன்யாவின் அரசியல் வருகை பாலின சமத்துவத்தை விதைக்கும் நோக்கம் கொண்டது. ஹார்மோன்களின் மாறுபட்ட தன்மையால் அவர் பள்ளி காலத்திலேயே தன்னை மூன்றாம் பாலினத்தவராக உணர்ந்தார். கொல்லம் மாவட்டத்தின் பெருமண் பகுதியை பூர்வீகமாக கொண்ட அவரை, அந்த நிலையிலேயே அவரது குடும்பமோ, பழகிய நண்பர்களோ ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் 12-ம் வகுப்பிலேயே வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அங்கிருந்து பெங்களூரு சென்றவரை திருநங்கை மேக்கப் கலைஞர் ரெஞ்சு ரெஞ்சிமார் தத்தெடுத்து வளர்த்தார். அதன்பின்பு கேரளா வந்த அனன்யா, தனது திறனை வளர்த்து கொண்டு ரேடியோ ஜாக்கியாக உருவெடுத்தார்.

கேரளாவின் எர்ணாக்குளத்தில் அண்மையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவை இவர்தான் தொகுத்து வழங்கினார். இப்போது மலப்புரம் மாவட்டத்தின் வெங்கரா தொகுதியில் போட்டியிடுகிறார். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறியதாவது:

பாலின சமத்துவத்தை வலியுறுத்தவும், மக்களுக்கு உணர்த்தவும்தான் தேர்தலில் போட்டியிடு கிறேன். திருநங்கைகளுக்கும் அரசியல் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். கேரள தேர்தலில் போட்டியிடும் முதல் மூன்றாம் பாலினத்தவர் நான் தான். இந்தத் தேர்தலை எங்களின் அடையாளத்தை, கோரிக்கையை எடுத்து வைக்கும் ஒரு வாய்ப்பாகதான் பார்க்கிறேன். அதற்கு நான் ஏதாவது ஒரு பிரபலத்தை எதிர்த்துதானே போட்டியிட வேண்டும். அப்படி நினைத்துதான் வெங்கராவைத் தேர்ந்தெடுத்தேன். நான் வென்றால் மூன்றாம் பாலினத்தவருக்கான பணிகளை முன்னெடுப்பேன். அந்த தளத்தில் இருந்தே வருவதால் எனக்கு அதில் நிபுணத்துவம் இருக்கிறது.

நான் வெற்றிபெற்றால் சட்டப்பேரவையில் திருநங்கைகளை துன்புறுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை கொடுக்கும் வகையில் சட்டம் இயற்ற குரல் கொடுப்பேன். அதேபோல் திருநங்கைகள் அவர்கள் சொந்த வீட்டிலேயே வாழும் சூழலுக்கு வழிவகுக்கும் சட்டங்களை இயற்றவும் பாடுபடுவேன். ஏன், என்றால் நானும் 12-ம் வகுப்பில் வீட்டை விட்டு வெளியேறிய நபர்தான். எத்தனை மூன்றாம் பாலினத்தவர்கள் தங்க இடம் இன்றி இருக்கிறார்கள் தெரியுமா? அவர்களின் தவிப்பை நான் உணர்ந்திருக்கிறேன்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் முன் எங்களுக்கான கோரிக்கைக்கு போய் நிற்பதை விட, நாங்களும் குரல் எழுப்புபவர்களாக இருக்க வேண்டும் என்பதாலேயே தேர்தலை சந்திக்கிறேன். கட்சி, சாதி, மதம் கடந்து சிந்திக்கும் கேரள மக்கள் என்னையும் மனதார ஏற்பார்கள் என நம்புகிறேன். மூன்றாம் பாலினத்தவரின் சட்டப்பேரவை தேர்தலை நோக்கிய பயணத்துக்கு நான் தொடக்கமாகி இருப்பதேயே வெற்றி பெற்றதை போல் உணர்கிறேன்.

இவ்வாறு அனன்யா குமாரி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in