

1991-ம் ஆண்டு சிலி நாட்டு செனேட்டர் ஒருவரை கொலை செய்தது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள வெர்ஹூவன் என்ற பெண்மணியை பிரான்ஸ் அரசிடம் ஒப்படைப்பதில் என்ன தடை என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பான வழக்கு நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான அமர்வுக்கு விசாரணைக்கு வந்த போது, கேரள மீனவர்களை சுட்டுக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட இத்தாலிய கடற்படை வீரர்களை விடுதலை செய்யும் போது இந்தப் பிரெஞ்சுப் பெண்மணியை ஏன் விடுவிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியது.
“பிரான்ஸ் அரசு அவரை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்வதாக தெரிவிக்கும் போது அவரை விடுவிப்பதில் என்ன பிரச்சினை? மற்றொரு வழக்கில் அயல்நாட்டு குடிமகன்கள் இருவரை அங்கு செல்ல அனுமதித்துள்ளீர்கள். இத்தாலிய அரசை நீங்கள் மதிக்கும் போது பிரான்ஸ் அரசையும் மதிக்க வேண்டும்” என்றார்.
மத்திய வெளியுறவு அமைச்சக சொலிசிட்டர் ஜெனரல் பட்வாலியா 56 வயது பிரான்ஸ் பெண்மணி மேரி இம்மானுயெல் வெர்ஹோவன் என்பவரை விடுவிப்பதை எதிர்த்து வாதிட்ட போது நீதிபதிகள் இந்தக் கேள்வியை எழுப்பினர்.
அதாவது சிலி அதிகாரிகள் அவரை தங்கள் வசம் ஒப்படைக்கக் கோரியுள்ள போது பிரான்சிடம் எப்படி ஒப்படைப்பது என்று கேள்வி எழுப்பினார் சொலிசிட்டர் ஜெனரல்.
இதனையடுத்து அமைச்சகம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் ஒரு வாரகால அவகாசம் அளித்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நவம்பர் 16-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.