சகிப்பின்மை: மக்களவை விவாதத்தில் ராஜ்நாத் - சலீம் இடையே சொற்போர்

சகிப்பின்மை: மக்களவை விவாதத்தில் ராஜ்நாத் - சலீம் இடையே சொற்போர்
Updated on
1 min read

சகிப்பின்மை குறித்த மக்களவை விவாதத்தின் போது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும், மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் முகமது சலீமுக்கும் இடையே கடுமையான சொற்போர் நடந்தது.

மக்களவையில் இன்று (திங்கள்கிழமை) கேள்வி நேரம் முடிந்ததும், நாட்டில் அதிகரித்து வரும் சகிப்பின்மை தொடர்பான நிகழ்வுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

இதற்கு அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உடனடியாக அனுமதி மறுத்ததால், சிறிது நேரம் அமளி நிலவியது. அதன் பிறகு சகிப்பின்மை பற்றிய விவாதத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

அப்போது, மக்களவையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் முகமது சலீம், மத்தியில் நரேந்திர மோடி ஆட்சியைப் பிடித்ததை, "800 ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் இந்து மதத்தவர் ஆட்சிக்கு வந்துள்ளார்" என ராஜ்நாத்சிங் பாராட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக குற்றம்சாட்டினார்.

முகமது சலீமின் இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த ராஜ்நாத் சிங், தான் இப்படி ஒரு கருத்தை ஒருபோதும் தெரிவித்ததில்லை என்றார். இதற்காக சலீம் மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.

ராஜ்நாத் சிங் மேலும் கூறும்போது, "எனது நாடாளுமன்ற வாழ்க்கையில் இத்தகைய குற்றச்சாட்டை நான் சந்தித்ததில்லை. இந்தக் குற்றச்சாட்டு என்னை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. இத்தகைய கருத்தை எந்த ஒரு உள்துறை அமைச்சர் சொல்லியிருந்தாலும் அவர் பதிவியில் நீடிக்கக் கூடாது. என்னை அவதூறாக பேசிய சலீம் ஒன்று குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

அப்போது குறுக்கிட்ட முகமது சலீம், "இந்தக் குற்றச்சாட்டை நானாக சொல்லவில்லை. ஒரு பத்திரிகையில் ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையல்ல என்றால் சம்பந்தப்பட்ட பத்திரிகைக்கு ராஜ்நாத் சிங் சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும்" என்றார்.

அப்போது பாஜகவினர் சிலர் முகமது சலீமுக்கு எதிராக குரல் எழுப்பினர். எந்த இடத்தில் ராஜ்நாத் சிங் இதைத் தெரிவித்தார் எனக் குறிப்பிட வேண்டும் என்றனர். அதற்கு பதிலளித்த சலீம், "ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் ராஜ்நாத் சிங் இவ்வாறு பேசியதாக பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது" என்றார்.

முகமது சலீமை எதிர்த்து பாஜகவினர் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி வந்ததால் அவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in