

வீட்டு வாசலுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டம் டெல்லியில் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
வீட்டு வாசலுக்கே ரேஷன் விநியோகிக்கும் டெல்லி முதல்வரின் பெயரிலான திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.
இதனால், அதன் பெயரை மாற்றி ஏற்கெனவே அறிவித்தபடி நாளை முதல் டெல்லிவாசிகளுக்கு ரேஷன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசின் சார்பில் ‘முக்கிய மந்திரி கர் கர் ரேஷன் யோஜ்னா( வீடுதோறும் ரேஷன் வழங்கும் முதல்வர் திட்டம்)’ எனும் பெயரில் மார்ச் 25 முதல் அமல் செய்வதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் டெல்லியில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இதனால், அதன் சட்டதிட்டங்களின்படி அவற்றை முதல்வரின் பெயரில் புதிய திட்டமாக அமலாக்க முடியாது எனக் குறிப்பிட்டு மத்திய அரசு முதல்வர் கேஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியிருந்தது.
இதனால், அடுத்த நான்கு தினங்களில் அமலாகவிருந்த இத்திட்டத்தை டெல்லி அரசு வாபஸ் பெற்றது. இருப்பினும், அத்திட்டத்திற்கு எந்த பெயரும் வைக்காமல் நாளை முதல் வீடுகளுக்கே ரேஷன் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தமுடிவை இன்று கூடிய முதல் கேஜ்ரிவாலிம் கேபினேட் அமைச்சரவை எடுத்துள்ளது. எனவே, ஏற்கெனவே டெல்லி அரசு அறிவித்தபடி வீட்டுக்கே ரேஷன் வழங்கும் திட்டம் நாளை மார்ச் 25 முதல் அமலாகிறது.
டெல்லியில் ரேஷன் கடைகள் முறையாக செயல்படுவதில்லை என்ற புகாரின் காரணமாக ஆம் ஆத்மி அரசு இத்திட்டத்தை அறிவித்திருந்தது. இம்மாநிலத்தில் சுமார் 17 லட்சம் பொதுமக்கள் ரேஷன் உணவு பொருட்கள் பயனாளிகளாக உள்ளனர்.
இவர்களுக்கு கரோனா பரவலால் ஊரடங்கு அமலாக்கப்பட்ட காலத்தில் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
பெரும் பாரட்டை பெற்ற இத்திட்டத்தை, டெல்லி முதல் அமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் நிரந்தரத் திட்டமாக செயல்படுத்த முடிவு செய்தார்.
இதுபோல், வீட்டுகே சென்று அரசு சேவை செய்யும் திட்டம் முதன்முறையல்ல. கடந்த ஜூலையில், ஓட்டுநர் உரிமம், குடியிருப்பு மற்றும் சாதிச்சான்றிதழ்கள் உள்ளிட்ட 100 வகையான அரசு சேவைகளை டெல்லி அரசு அறிமுகப்படுத்தி படிப்படியாக செயல்படுத்துகிறது.-24-03-2021