

கரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க மத்திய அரசு லாக்டவுன் கொண்டுவந்து ஓர் ஆண்டாகிவிட்டது, ஆனால் இன்னும் வேலையின்மைச் சிக்கலில் இருந்து நாடு மீளவில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் தொடங்கியபோது, அதிலிருந்து மக்களைக் காக்கும் பொருட்டும், பரவலைக் குறைக்கும் வகையில், கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி லாக்டவுன் நடவடிக்கை மத்திய அரசு கொண்டுவந்தது.
இந்த லாக்டவுன் நடவடிக்கையால் வர்த்தக நடவடிக்கை, தொழில், வியாபாரம் அனைத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. கூலித் தொழிலாளர்கள், நிறுவனங்களில், சிறு, குறுந் தொழில்களில் வேலைபார்த்த ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழப்பைச் சந்தித்தனர். லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழந்து நடந்தும், ரயிலிலும் சொந்த மாநிலங்களுக்குச் சென்றனர்.
இந்நிலையில் நாட்டின் பொருளாதார சூழல்,வேலையின்மை நிலவரம் குறித்து இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம்(சிஎம்ஐஇ) ஆய்வு நடத்தியுள்ளது. அதன்படி, 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின்படி நாட்டில் வேலையின்மை 6.9 சதவீதமாக இருக்கிறது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் சிறிது பரவாயில்லை என்றாலும் இன்னும் வேலையின்மை நிலையிலிருந்து மீளவில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வேலையின்மை 7.8 சதவீதம் இருந்தது. மார்ச் மாதத்தில் 8.8. சதவீதமாக அதிகரித்தது.
இதில் லாக்டவுன் காலத்தில் வேலையின்மை உச்சக்கட்டமாக 2020, ஏப்ரல் மாதத்தில் 23.5 சதவீதமும், மே மாதத்தில் 21.7 சதவீதமும் இருந்தது. ஜூன் மாதத்தில்இருந்து வேலையின்மையின் தீவிரம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. ஜூன் மாதத்தில் 10.2 சதவீதமாகவும், ஜூலையில் 7.4 சதவீதமாகவும் இருந்தது.
ஆகஸ்ட் மாதம் 8.3 சதவீதமாகவும் செப்டம்பரில் சிறிதளவு குறைந்து 6.7 சதவீதமாகவும் இருந்தது.
2020, அக்டோபரில் வேலையின்மை மீண்டும் அதிகரித்து 7 சதவீதத்தைத் தொட்டது, நவம்பரில் சிறிதளவு குறைந்து 6.5 சதவீதமாகக் குறைந்தது. டிசம்பரில் 9.1 சதவீதமாக அதிகரித்து, ஜனவரியில் 6.5 சதவீதமாகக் குறைந்தது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்துதான் வேலையின்மை அளவு படிப்படியாகக் குறையத் தொடங்கினாலும், அதில் நிலையற்ற தன்மையே காணப்படுகிறது. உற்பத்தித்துறை, மற்றும் சேவைத்துறை வேகமெடுக்கும்போதுதான் வேலையின்மை அளவு குறையும்.
லாக்டவுன் காலத்தில்கூட நாட்டின் வேளாண் துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளது, தற்போதும் சீராக இருந்து வருகிறது. ஆனால், நகர்ப்புறங்கள் மற்றும் தொழிற்துறையில்தான் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பது இன்னும் முன்னேற்றம் அடைவது அவசியமாகும்.
மத்திய தொழிலாளர் துறை புள்ளிவிவரங்கள் படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் ரோஜர் திட்டத்தின் கீழ் 2021, மார்ச் 9ம் தேதி வரை 16.5 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.
வேலையிழப்பு ஏற்பட்ட மக்களுக்காக சமூக உதவித்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பை உருவாக்க இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2,567 கோடி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜனவரியில் 28 சதவீதம் புதிதாக உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.
பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில் " ஆத்மநிர்பார் ரோஜர் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 50 லட்சம் முதல் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. ஆனால், சரியான திட்டமிடல், தீவிரமான கண்காணிப்பு, திட்டத்தைச் செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலமே இலக்கை அடைய முடியும். இன்னும் வேலையின்மையிலிருந்து முழுமையாக மீளவில்லை" னஎத் தெரிவிக்கின்றனர்.