நீதிபதி என்.வி.ரமணா : கோப்புப்படம்
நீதிபதி என்.வி.ரமணா : கோப்புப்படம்

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி: என்.வி.ரமணாவை நியமிக்க எஸ்.ஏ.பாப்டே பரிந்துரை

Published on

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி என்.வி.ரமணாவை நியமிக்கக் கோரி தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்து கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசுக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பியபின், அந்த நகலை என்.வி.ரமணாவுக்கு எஸ்.ஏ.பாப்டே வழங்கியுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் எஸ்.ஏ.பாப்டேவின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் 23-ம் தேதியோடு முடிகிறது. அதனால் புதிய தலைமை நீதிபதியை நியமிக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கிவிட்டது.

இது தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்குக் கடிதம் எழுதி அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் எனப் பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கக் கோரியிருந்தார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நியமனத்தில் சில மரபுகள் பின்பற்றப்படுகின்றன. இதன்படி, ஓய்வு பெறும் தலைமை நீதிபதி, தனக்கு அடுத்ததாக அந்தப் பதவியில் யாரை நியமிக்கலாம் என்று மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்வார்.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே
தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே

இது பெரும்பாலும் மூத்த நீதிபதியைத் தலைமை நீதிபதியாக நியமிக்கவே பரிந்துரை செய்யப்படும். அவர் தகுதியானவராக இருந்தால், அவரையே தலைமை நீதிபதியாக நியமிக்கக் குடியரசுத் தலைவருக்குப் பிரதமர் பரிந்துரை செய்வார். அதை ஏற்று, குடியரசுத் தலைவரும் நியமன உத்தரவைப் பிறப்பிப்பார்.

ஆனால், தலைமை நீதிபதி பதவிக்குப் பரிந்துரை செய்யப்படும் மூத்த நீதிபதி தகுதியானவராக இல்லாத பட்சத்தில், அடுத்ததாக யாரை நியமிக்கலாம் என்பது பற்றி உச்ச நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில புகார்கள் அடங்கிய கடிதத்தை ஆந்திர முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு அனுப்பி இருந்தார். அந்தக் கடிதத்தைத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே நிராகரித்து, தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். ஏப்ரல் 24-ம் தேதி புதிய தலைமை நீதிபதியாக ரமணா பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் மிக மூத்த நீதிபதியாக இருக்கும் என்.வி.ரமணா 1957, ஆகஸ்ட் 27-ம் தேதி பிறந்தவர். இவரின் பதவிக்காலம் 2022 ஆகஸ்ட் 26-ம் தேதி முடிவடைகிறது. தலைமை நீதிபதியாக ரமணா நியமிக்கப்பட்டால், ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தலைமை நீதிபதியாக வரும் முதல் நீதிபதியாக இருப்பார்.

ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் 2000-ம் ஆண்டு ஜூனில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பின் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், 2014-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in