Last Updated : 24 Mar, 2021 11:53 AM

 

Published : 24 Mar 2021 11:53 AM
Last Updated : 24 Mar 2021 11:53 AM

தீவிரமடையும் கரோனா: டெல்லியில் ஹோலி, நவராத்திரி பண்டிகையைப் பொதுவெளியில் கொண்டாடத் தடை

கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து டெல்லியில் ஹோலி, நவராத்திரி, ஷாப் இ பரத் ஆகிய பண்டிகைகளைப் பொதுவெளியில் மக்கள் கொண்டாடுவதற்கு டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) தடை விதித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் டெல்லி விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் வரும் பயணிகளுக்கு அடிக்கடி கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் கடந்த சில வாரங்களாக கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்களாக நாள்தோறும் 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று 47 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.

கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளது. டெல்லி மாநில உள்துறைச் செயலாளர் விஜய் தேவ் பிறப்பித்த வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

''டெல்லி மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து, ஹோலி, ஷாப் இ பரத், நவராத்திரி ஆகிய பண்டிகைகளில் பொதுவெளியில் மக்கள் கூடிக் கொண்டாடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. இதுபோல் பொது இடங்கள், மைதானங்கள், பூங்காக்கள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்களில் மக்கள் கூடவும் தடை விதிக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக டெல்லி, என்சிஆர் பகுதிகளில் கரோனா வைரஸ் அதிகரித்து வருவதைக் கவனித்து வருகிறோம். பொது இடங்கள், மைதானங்கள், பூங்காக்கள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்களில் போன்றவற்றில் மக்கள் கூடும்போது தொற்று மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், இந்தத் தடை விதிக்கப்படுகிறது.

இந்த உத்தரவை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், துணை ஆணையர்களும் தீவிரமாகக் கடைப்பிடித்து, மக்கள் கூடுவதைத் தடுக்க வேண்டும். தொற்று திரட்சி அதிகமாக இருக்கும் இடங்களில் பரிசோதனை, தனிமைப்படுத்துதல், கண்காணிப்பு ஆகியவற்றைத் தீவிரப்படுத்த வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்களில் அடிக்கடி பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும். அந்தப் பரிசோதனையின் முடிவுகள் வந்த பின்புதான் அவர்களை அனுமதிக்க வேண்டும். பயணிகளில் ஒருவருக்கு கரோனா இருந்தால், 10 நாட்கள் மருத்துவமனை அல்லது கோவிட் மையத்தில் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டும்''.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x