Published : 24 Mar 2021 03:13 AM
Last Updated : 24 Mar 2021 03:13 AM

நம் நாட்டில் இன்னொரு ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு நாடு தாங்காது: ரிசர்வ் வங்கி அறிக்கையில் கருத்து

புதுடெல்லி

கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட கரோனா ஊரடங்கு, கட்டுப்பாடு நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்தில் விழுந்தது. வீழ்ச்சி கண்ட பொருளாதாரம் தற்போது மெல்ல மீண்டு வந்துகொண்டிருக்கும் நிலையில் மீண்டும் சில மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்ற அச்சம் எல்லோரிடமும் எழுந்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் மாதாந்திர அறிக்கையில் அதன்துணை கவர்னர் மைகேல் தெபபிரதா பத்ரா கூறியிருப்பதாவது: தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதமாக்கும் கட்டாயமான சூழலில் இருக்கிறோம். எனவேதான் தொடுதல் தொடர்பான சேவைகளைக் கொண்ட துறைகளும் தீவிரமாக இயங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்நிலையில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிப்பு, ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என்ற நிலை உண்டாகுமெனில் அதன் பாதிப்பை நிச்சயம் தாங்க முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும், ‘‘ரிசர்வ் வங்கி கணிப்புப்படி ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வருடாந்திர பொருளாதார வளர்ச்சி26.2 சதவீதமாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த விகிதம் மிகக் குறைவு. எங்களுடைய கணிப்பில் இது இன்னும் குறைவாக 25.5 சதவீதம் என்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து கரோனா பாதிப்புஅதிகரித்தால் அதனால் பொருளாதாரம் மோசமான பாதிப்பைச் சந்திக்கும்’’ என டூஷே வங்கியின் தலைமை பொருளாதார வல்லுநர் கவுசிக் தாஸ் கூறியுள்ளார்.

பிப்ரவரியில் புதிதாக நோய்பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை தினசரி 9,800 என்று இருந்தது. தற்போது 40 ஆயிரம்என்ற அளவைத் தாண்டியிருக்கிறது. இந்திய மாநிலங்களில் மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அம்மாநிலம் இந்திய ஜிடிபியில் 14.5 சதவீதம்பங்கு வகிக்கிறது. இச்சூழலில் சில மாவட்டங்களில் ஊரடங்குநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடருமானால் கணிசமான பொருளாதார பாதிப்பை உண்டாக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x