

மேற்குவங்க தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் சமீபத்தில் பாஜக.வில் இணைந்த பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் பெயர் இடம்பெறவில்லை.
மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வந்தன. அந்த வகையில் இறுதி வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் பிரபல பெங்காலி நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் பெயர் இடம்பெறவில்லை.
ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் மிதுன் சக்கரவர்த்தி. இந்தக் கட்சி சார்பில் எம்.பி.யாகவும் இருந்தார். ஆனால், கடந்த 7-ம் தேதி பிரதமர் மோடி மேற்குவங்கத்தில் பிரச்சாரம் செய்த போது, பாஜக.வில் இணைந்தார் மிதுன். இதனால், இந்தத் தேர்தலில்அவருக்கு ராஷ்பெஹாரி தொகுதிஒதுக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அந்தத் தொகுதியில் லெப்டினன்ட் ஜெனரல் சுப்ரதா சாஹா போட்டியிடுவார் என்று பாஜக கூறியுள்ளது. இவர் காஷ்மீரில் பெரும் வன்முறைகள் நடந்த ஆண்டுகளில் அமைதியை நிலைநாட்ட மிக முக்கிய பொறுப்பு வகித்தவர்.
முன்னதாக, தெற்கு கொல்கத்தா தொகுதியில் மிதுன் சக்கரவர்த்தி போட்டியிடுவார். அதற்காகவே அந்த தொகுதி காலியாக வைக்கப்பட்டுள்ளது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால், 13 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியலில் மிதுன் சக்கரவர்த்தியின் பெயர் இடம்பெறாததால், அவரது ரசிகர்களும் பாஜக.வினரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் தனது பெயரை மும்பையில் இருந்து கொல்கத்தாவுக்கு மாற்றி உள்ளார்மிதுன். அதனால், வேட்பு மனு தாக்கல் முடிவதற்குள் தற்போதுள்ள வேட்பாளர்களில் யாரையாவது நீக்கிவிட்டு மிதுன் சக்கரவர்த்திக்கு பாஜக வாய்ப்பு கொடுக்கும் என்று கூறுகின்றனர்.
அதற்கேற்ப முதல்வர் மம்தாவைஎதிர்த்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை ஆதரித்து 30-ம் தேதி மிதுன் சக்கரவர்த்தி பிரச்சாரம் செய்ய உள்ளார். அப்போது நடக்கும் பேரணியில் மிதுனுடன் உள்துறை அமைச்சர் அமிஷ் ஷாவும் கலந்து கொள்ள உள்ளார்.
இதற்கிடையில், பல தொகுதிகளில் முன்னர் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை நீக்கிவிட்டு புதிதாக பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.