கூடுகிறது குளிர்கால கூட்டத் தொடர்: நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி புயல் தாக்க வாய்ப்பு

கூடுகிறது குளிர்கால கூட்டத் தொடர்: நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி புயல் தாக்க வாய்ப்பு
Updated on
2 min read

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. நாட்டு நலனுக்கு உகந்த சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேற ஆதரவு அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தக் கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, சகிப்பின்மை முதலான விவகாரங்கள் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வியாழக்கிழமை துவங்கி, வரும் டிசம்பர் 23-ம் தேதி வரை நடக்கிறது. அரசியல் சாசனம் வகுத்த டாக்டர் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, குளிர்கால கூட்டத்தொடரின் முதல் இரு நாட்கள் சிறப்பு அமர்வு நடக்கிறது. அதன் பின்னர் தான் வழக்கமான அலுவல் பணிகள் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத் தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி, நிலம் கையகப்படுத்துதல் மசோதா உட்பட பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

அதேநேரத்தில் இம்மசோதாக்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களை முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

மேலும், சகிப்பின்மை விவகாரம் தொடர்பாகவும் விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ், ஐஜத மற்றும் சிபிஐ (எம்) கட்சிகள் நோட்டீஸ் வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அத்துடன், எழுத்தாளர்கள் விருதுகளை திரும்ப ஒப்படைத்த விவாரத்தையும் எதிர்க்கட்சிகள் வலுவாக எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்துக் கட்சிக் கூட்டமும் மோடி கோரிக்கையும்

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. அப்போது நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்துக்கு பின், நிருபர்களுக்கு பேட்டியளித்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, "மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாகவும் அர்த்தமுள்ளதாகவும் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், நாட்டு நலனுக்கு உகந்த சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேற ஆதரவு அளிக்கும்படியும் கேட்டுக் கொண்டார். இம்மசோதா தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு நிதியமைச்சர் அருண் ஜெட்லி பதில் அளிக்க இருப்பதையும் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், நாட்டில் எழுந்துள்ள அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார்" என்றார் அவர்.

புயலைக் கிளப்பும் ஜிஎஸ்டி

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா தொடர்பான எங்களது கோரிக்கையை பரிசீலித்தால் அதுகுறித்த விவாதத்துக்கு தயார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்தும், மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் இன்று செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது, அவர்கள் கூறும்போது, "நியாயமானதாக இருந்தால் ஒவ்வொரு மசோதாவையும் ஆதரிக்க நாங்கள் தயாராக உள்ளோம். எங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு சட்டமும் முக்கியமானதுதான்.

ஜிஎஸ்டி மசோதா முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தயாரிக்கப்பட்டது. இந்த மசோதா தொழில் துறை, வர்த்தக துறை மற்றும் வாடிக்கையாளர் ஆகிய அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. இதை பரிசீலிக்க தயாராக இருந்தால் இதுதொடர்பான விவாதத்துக்கு நாங்கள் தயாராக உள்ளோம்" என்றனர்.

குறிப்பாக, தாத்ரி கொலை சம்பவம், அதிகரித்து வரும் சகிப்பின்மை உட்பட பல்வேறு முக்கிய பிரச்னைகளை இந்தத் தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருவது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in