மம்தா பானர்ஜிக்கு முஸ்லிம்கள் வெறும் வாக்கு வங்கி மட்டுமே; மேற்குவங்கத்தில் 27-ம் தேதி பிரச்சாரம் தொடக்கம்: ஒவைசி அறிவிப்பு

மம்தா பானர்ஜிக்கு முஸ்லிம்கள் வெறும் வாக்கு வங்கி மட்டுமே; மேற்குவங்கத்தில் 27-ம் தேதி பிரச்சாரம் தொடக்கம்: ஒவைசி அறிவிப்பு
Updated on
1 min read

மம்தா பானர்ஜியும், காங்கிரஸ் கட்சி தலைவர்களும் மேற்குவங்க முஸ்லிம்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கின்றனர் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி குற்றம்சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம்தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.

அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு புறம் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். பிஹார் சட்டப்பேரவையில் நடந்த தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்ற ஏஐஎம்ஐஎம் கட்சி மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிடுகிறது.

இதனால் மேற்கு வங்கத்தில் நாள்தோறும் கட்சித் தலைவர்களுக்கு இடையே பரபரப்பான வாதங்கள், அறிக்கைகள் அனல் பறக்க வெளியாகி வருகின்றன.

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பேசும்போது, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியை பாஜகவின் பி டீம் என்றும், பணம் பெற்றுக்கொண்டு வாக்குகளைப் பிரிக்கப் பார்க்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலடி கொடுத்த அசாதுதீன் ஒவைசி பணத்தால் ஒவைசியை வாங்குவதற்கு யாரும் இல்லை, மம்தாவின் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரும் பாஜக பக்கம் போய்ச் சேரும்போது அவர் அதை நினைத்து வருத்தப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அசாதுதீன் ஒவைசி மேற்குவங்க மாநிலத்தில் அ்ண்மையில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவருக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இந்த நிலையில் வரும் 27-ம் தேதி அவர் மேற்குவங்கத்தில் மீண்டும் தேர்தல் பிரச்சாரத் தொடங்குகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

மேற்குவங்க மாநிலத்தில் மொத்தம் 78 தொகுதிகளில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் கணிசமாக உள்ளன. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் முஸ்லிம் வாக்காளர்களே தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். இங்கு 13 தொகுதிகளில் ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிடுகிறது. அவர்களை ஆதரித்து நான் மார்ச் 27-ம் தேதி நான் பிரச்சாரத்தை தொடங்குகிறேன்.

சாகர்திஹியில் முதல் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், காங்கிரஸ் கட்சி தலைவர்களும் மேற்குவங்க முஸ்லிம்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கின்றனர். இந்த ஆண்டுகள் மேற்குவங்க முஸ்லிமகள் எந்த பலனையும் பெறவில்லை. அவர்களின் வாழ்க்கையிலும் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in