

விவசாயிகள் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலைத்துறையில் ரூ.814 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகவலை நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய தரைவழிப்போக்குவரத்து துறை அமைச்சரான நிதின் கட்கரி தகவல் அளித்தார்.
இது குறித்து மக்களவையில் மத்திய அமைச்சர் கட்கரி முன்வைத்த ஒரு புள்ளிவிவரத்தில் கூறும்போது, ‘டெல்லியில் துவங்கிய விவசாயிகள் போராட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடிகள் திறந்துவிடப்பட்டன.
இதனால், அரசிற்கு கடந்த மார்ச் 16 வரையிலும் ரூ.814 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இவை குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மட்டுமாக உள்ளது.
இவற்றில் அதிகபட்சமாக பஞ்சாபில் ரூ.487 கோடி இழப்பாகி உள்ளது. ஹரியானாவில் ரூ.326 கோடியும், ராஜஸ்தானில் ரூ.1.04 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் இதுபோல், எந்தவித இழப்பும் சுங்கச்சாவடிகளில் ஏற்படவில்லை. எனவே, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் மாநில அரசுகளிடம் அச்சாவடிகளை மீண்டும் அமைக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.