

மக்கள் கண்டிப்பாக கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் மற்றொரு லாக்டவுன் நடவடிக்கையைத் தவிர்க்க இயலாது. முதல்வரும் லாக்டவுனுக்கு சாதகமாகத்தான் இருக்கிறார் என்று மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாக கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் நாள்தோறும் உருவாகும் கரோனா வைரஸ் பரவலில் 60 சதவீதத்துக்கு மேல் மகாராஷ்டிராவில்தான் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்
கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பால், மகாராஷ்டிராவில் யாவத்மால், அமராவதி, புனே உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
புனே மாவட்டத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 2,173 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர், 10 பேர் உயிரிழந்துள்ளனர். பால்கர் மாவட்டத்தில் கரோனாவில் இதுவரை ஒட்டுமொத்த பாதிப்பு 47,666 ஆக அதிகரித்துள்ளது. 1,209 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பையில் அதிகரித்துவரும் கரோனா பரவலைத் தடுக்க அங்கு மக்கள் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் இன்றி வெளியே வரும் மக்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. மேலும் திரையரங்குகள், அரசு, தனியார் அலுவலகங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் குறையவில்லை. தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "மக்கள் மற்றொரு லாக்டவுன் நடவடிக்கை வேண்டாம் என நினைத்தால், அனைவரும் கரோனா கட்டுப்பாடு விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். தொடர்ந்து கரோனா பரவல் அதிகரித்தால், மீண்டும் லாக்டவுனைக் கொண்டுவருவதற்கு முதல்வர் உத்தவ் தாக்கரேவும் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் நான் முதல்வர் உத்தவ் தாக்கரேவைச் சந்தித்தேன். நாள்தோறும் 25 ஆயிரம் பேருக்கு அதிகமாக கரோனா வைரஸால் பாதிக்கப்படுவது அடுத்து சில நாட்களுக்குத் தொடர்ந்தால் சில கடுமையான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். தொடர்ந்து கரோனா வைரஸ் பரவல் அதிகரித்தால், பல நகரங்களில் நாம் லாக்டவுன் விதித்தால் தவறில்லை எனத் தெரிவித்தார்.
ஆதலால், மக்களிடம் நான் கேட்பது, லாக்டவுனைத் தவிர்க்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், கரோனா கட்டுப்பாட்டு விதிகளைத் தீவிரமாகக் கடைப்பிடியுங்கள். முகக்கவசம் அணியுங்கள், கைகளைச் சுத்தமாக வைத்திருங்கள். சமூக விலகலைக் கடைப்பிடியுங்கள்" எனத் தெரிவித்தார்.