

சந்தர்ப்பவாத அரசியலே காங்கிரஸின் ஒரே நோக்கம், அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநிலம் மீண்டும் இருண்ட காலத் துக்கு சென்றுவிடும் என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.
மொத்தம் 126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கு மார்ச் 27 முதல் ஏப்ரல் 6 வரை 3 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திப்ரூகர் மாவட்டம், டிங்கோங் என்ற இடத்தில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:
அசாம் மக்களை பாதுகாப்பதிலும் அவர்களுக்கு பணியாற்றுவதிலும் பாஜக எப்போதும் முன்னணியில் உள்ளது. சந்தர்ப்பவாத அரசியலே காங்கிரஸ் கட்சியின் ஒரே நோக்கம். கேரளத்தில் முஸ்லிம் லீக் கட்சியுடன் இணைந்துகொண்டு மார்க்சிஸ்ட் கட்சியை காங்கிரஸ் எதிர்க்கிறது. ஆனால் மேற்கு வங்கம் மற்றும் அசாமில் அவ்விரு கட்சிகளுடனும் காங்கிரஸ் கைகோத்துள்ளது. யானையை போலவே காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு பற்கள் உள்ளன. ஒன்று வெளிக்காட்டிக் கொள்வதற்கும் மற்றொன்று மென்று விழுங்குவதற்கும் உள்ளன. காங்கிரஸ் எதையாவது சொல்கிறது. எப்போதும் எதிர்மறையாக பேசுகிறது. அக்கட்சி சமூகத்தை பிளவுபடுத்துகிறது.
வளர்ச்சிக்கு பாஜக
பாஜக வளர்ச்சியை குறிக்கும் வேளையில், காங்கிரஸ் இருளை குறிக்கிறது. அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இம்மாநிலம் மீண்டும் இருண்ட காலத்துக்கு சென்றுவிடும். உங்களுக்கு இருள் வேண்டுமானால் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள். வளர்ச்சி வேண்டுமானால் பாஜகவுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.