

அரசியலில் புதிய சரித்திரம் படைக்க வந்துள்ளார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தலித் எழுத்தாளர் மனோரஞ்சன் பையபாரி.
ஹூக்ளி மாவட்டம் பாலகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோரஞ்சன். நக்சல் இயக்கத்தில் சேர்ந்து அரசுக்கு எதிராக போராடி வந்தமனோரஞ்சன் பின்னர் மனம் மாறினார். அதன் பின்னர் எழுத்தாளராக மாறி சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டு வர போராடி வருகிறார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தலித் மக்களின் நல்வாழ்வுக்காக தனது எழுத்து மூலமாகவும், ஆக்கப்பூர்வமான போராட்டங்கள் மூலமாகவும் தொடர்ந்து போராடி வருகிறார் மனோரஞ்சன்.
தற்போது அவருக்கு பாலகர்பகுதியில் போட்டியிட வாய்ப்புவழங்கியுள்ளது திரிணமூல் காங்கிரஸ் கட்சி. இதுவரை எழுத்தாளராக இருந்தவர் ஒரேநாளில் அரசியல்வாதியாகிவிட்டார். இதுகுறித்து மனோரஞ்சன் கூறியதாவது:
நான் வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்து வந்தவன். ரிக்ஷா ஓட்டுவது, மயானத்தில் வேலை செய்பவது, கூலி வேலை, சமையல் வேலை, டீ வியாபாரி என பல தொழில் செய்தவன் நான். இதெல்லாம் வெறுத்துப் போய் நக்சல் இயக்கத்தில் சேர்ந்தேன். ஆனால் அதிலிருந்தும் மனம் மாறிவிட்டேன். பின்னர் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க வந்திருக்கிறேன் என்று கூறி அவர்களின் வேதனைகளுக்கு வடிகாலாக இருந்தேன்.
இதுவரை ஒரு சில குறிப்பிட்ட இனத்தைப் பற்றியும், அவர்களது வேதனைகள், கஷ்டங்களை மட்டுமே எழுதி வந்திருக்கிறேன். தற்போது அந்த வேதனைகளை மாற்றி அவர்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறேன். அதனால்தான் அரசியலுக்கு வந்துள்ளேன். நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். இதை வாக்காளர்களும் அறிவர். என்னுடைய திட்டங்கள், கொள்கைகளை மக்களிடம் சேர்க்கும் கருவியாக திரிணமூல் காங்கிரஸைப் பார்க்கிறேன். அதனால்தான் அந்தக் கட்சியில் இணைந்தேன். மக்களால், மக்களுக்காக பாடுபடுவேன் என உறுதி அளிக்கிறேன். அரசியலிலும் சரித்திரம் படைப்பேன்.
நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகளாகிவிட்டன. இருந்தபோதும் சாதி அரசியல் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் மிகவும் மோசமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
இவர் எழுதிய பல புத்தகங்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு இலக்கிய விழாக்களிலும், புத்தகக் கண்காட்சியிலும் பெரும்பாராட்டுகளை இவரது புத்தகங்கள் குவித்துள்ளன.
1950-களில் வங்கதேசத்திலிருந்து வெளியேறி இந்தியாவுக்கு வந்தவர்தான் மனோரஞ்சன் என்பது குறிப்பிடத்தக்கது.