

சிவாஜி சிலையை இடமாற்றம் செய்வதற்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலையை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சிவாஜிக்கு நினைவிடம் கட்டப்படவிருப்பதால், அதுவரை சிவாஜி சிலை தற்போதுள்ள இடத்திலேயே இருக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியிருந்தது. இந்த கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சிவாஜி சிலையை தற்போதுள்ள இடத்தில் இருந்து அகற்ற இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
2 ஆண்டு அவகாசம் அளிக்க முடியாது
இம்மனு, நீதிபதிகள் குரியன் ஜோசப், அருண் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளிக்க முடியாது என்று கூறி தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், நினைவிடம் அமைக்கவும், சிலையை அகற்றவும் நியாயமாக எவ்வளவு அவகாசம் தேவை என்பதை ஒரு வாரத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.