

மறைந்த கர்நாடக தமிழர் இயக்க முன்னோடியும், மக்கள் பாவலருமான மருதுவின் உடல் இன்று பிற்பகல் பெங்களூருவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட மருது 1965ம் ஆண்டு பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்தார். இந்திய தொலைப்பேசி தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் அறிஞர் குணா, 'தமிழர் முழக்கம்' ஆசிரியர் வேதகுமார், பொன்.சந்திரன் உள்ளிட்டோருடன் இணைந்து கர்நாடக தமிழருக்கான இயக்கங்களை உருவாக்கி செயல்பட்டார்.
இயக்க செயல்பாட்டுடன் தமிழ் உணர்வு, பொதுவுடைமை, அம்பேத்கரிய சிந்தனை ஆகிய கருத்துக்களை கொண்ட கவிதைகளையும் மருது இயற்றினார். அவரது கவிதைகளை மக்கள் சமூக பண்பாட்டு கழகம், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் உள்ளிட்ட அமைப்பினர் மெட்டமைத்து நூற்றுக்கணக்கான மேடைகளில் பாடினர். ஒடுக்கப்பட்டோரின் விடுதலை உணர்வு நிறைந்த அந்த பாடல்கள் கர்நாடக தமிழர் மத்தியில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தின.
தினச்சுடர், தினமணி, செம்பரிதி, ஊற்று, மாணவர் முழக்கம், 'தமிழர் முழக்கம்' உள்ளிட்ட இதழ்களில் வெளியான மருதுவின் கவிதைகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. 'பறை முழக்கம்', 'உள்நாட்டு அகதிகள்', 'தென்றலின் சீற்றம்', 'நலிந்தோர் இடிமுழக்கம்', 'விடியல் மலர்கள்' ஆகிய இவரது கவிதைக் தொகுப்புகள் கர்நாடக தமிழ் இலக்கியத்தில் மருதுவுக்கு தனித்த அடையாளத்தை அளித்தன. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை, தமிழர் ஒற்றுமை, சாதி எதிர்ப்பு, பாட்டாளிகளின் விடுதலை உள்ளிட்ட கருத்துக்கள் நிறைந்த அவரது பாடல்கள் அவருக்கு ’மக்கள் பாவலர்’ என்ற அடைமொழியை வழங்கின.
கவிதை, நாடகம், தெருக்கூத்து ஆகியவற்றுடன் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர் நலனுக்கான போராட்டங்களில் தீவிரமாகப் பங்கெடுத்தார். கர்நாடக தமிழர் நலனுக்கான போராட்டங்கள், ஈழ தமிழர்களுக்கான ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றில் பங்கேற்றதால் காவல்துறையின் விசாரணைக்கும், சிறைத் தண்டனைக்கும் ஆளானார். முதுமையிலும் மக்கள் இயக்க கூட்டங்களிலும், பண்பாட்டு செயல்பாடுகளிலும் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.
’கவிதையாக நம்மோடு வாழ்வார்’
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணராஜபுரத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த பாவலர் மருது கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று உடல்நிலை தேறிய நிலையில் அண்மையில் வீடு திரும்பினார். நேற்று முன் தினம் திடீர் உடல் நலக்குறைவால் பாவலர் மருது காலமானார். அவரது மறைவு தமிழ் அமைப்பினர் மத்தியிலும், அம்பேத்கரிய இயக்கத்தினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள வெள்ளை காசியின் அன்பகத்தில் வைக்கப்பட்டிருந்த மருதுவின் உடலுக்கு கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார், கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் சி.ராசன், அம்பேத்கர் மக்கள் பேரவைத் தலைவர் ஜெய்பீம் சிவராஜ் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் நேற்று மருதுவின் உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, அல்சூர் லட்சுமிபுரம் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் சி.ராசன் இரங்கல் உரை ஆற்றுகையில், ‘ எனக்கும் மருதுவுக்கும் ஏறக்குறைய 40 ஆண்டுகால பழக்கம். இந்திய தொலைப்பேசி தொழிற்சாலையில் பணியாற்றும் போது தொடங்கி தமிழ் இயக்க செயல்பாடுகளில் பங்கேற்று சிறைக்குச் சென்றது வரை அவர் என்னோடு உற்ற தோழமையாக இருந்தார்.
மருதுவின் மறைவு கர்நாடக தமிழர்களுக்கும், பட்டியல் வகுப்பினருக்கும், பாட்டாளி வர்க்கத்துக்கும் பேரிழப்பாகும். அவர் மறைந்தாலும் அவர் எழுதிய கவிதைகள் என்றும் மறையாது. அந்த கவிதை வரிகளில் பாவலர் மருது நம்மோடு வாழ்வார்'' என்றார்.
கர்நாடக தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ''மருதுவின் மறைவு கர்நாடக தமிழர்களுக்கும், மொழி பேதமற்ற பட்டியல் வகுப்பினருக்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும் பேரிழப்பாகும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.