Last Updated : 22 Mar, 2021 01:54 PM

 

Published : 22 Mar 2021 01:54 PM
Last Updated : 22 Mar 2021 01:54 PM

அயோத்தி ராமர் கோயில் நிதியாக ரூ.3000 கோடி வசூல்: முதல் மாநிலமாக ராஜஸ்தான் ரூ.557 கோடி, தமிழகம் ரூ.85 கோடி அளிப்பு

புதுடெல்லி

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு நிதியாக ரூ.557 கோடி வழங்கி ராஜஸ்தான் முதல் மாநிலமாகத் திகழ்கிறது. இக்கோயிலுக்கு தமிழகத்திலிருந்து ரூ.85 கோடி வசூலாகி இருப்பது தெரிந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயிலுக்காக நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களில் நிதி வசூலாகி வருகிறது. இதற்காக கடந்த ஜனவரி 14 மகரசங்ராந்தி முதல் 49 நாட்களுக்கு என சிறப்பு நிதி வசூல் முகாம்களும் நடத்தப்பட்டன.

இதன்மூலம், ராமர் கோயிலை கட்டும் பணிக்காகன ராம்ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு ரூ.3000 கோடிக்கும் அதிகமாக நிதி சேர்ந்துள்ளது. இப்பணிக்காக நாடு முழுவதிலும் இருந்து பாஜக, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் உள்ளிட்ட சுமார் 9 பட்சம் ராமபக்தர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களை வைத்து 1 லட்சத்து 75 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டன. இவர்கள் நாட்டின் நான்கு லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களுக்கும் நேரில் சென்று கோயிலுக்கான நிதி திரட்டி இருந்தனர்.

இவற்றில் ரூ.557 கோடி கொடுத்து நாட்டில் அதிக நிதி அளித்த மாநிலத்தினராக ராஜஸ்தானியர்கள் திகழ்கிறனர். இந்த தொகையில் தமிழக மக்கள் அளித்து ரூ.85 கோடியும் இடம் பெற்றுள்ளது.

மற்ற மாநிலங்களில் ஜம்மு-காஷ்மீர் 14, கேரளா 13, அருணாச்சலப் பிரதேசம் 45, மணிபூர் 2 கோடி ரூபாய்களையும் அளித்துள்ளன. மிகக்குறைவாக சிறிய மாநிலமான மிசோராமில் 21, நாகாலாந்து 28, மேகாலாயா 85 லட்சம் ரூபாய்கள் என வசூலாகி உள்ளன.

கோயிலுக்காக அதிக அளவில் வரப்பெற்று வங்கிகளில் செலுத்தப்பட்ட சுமார் 80,000 காசோலைகள் இன்னும் அறக்கட்டளையின் கணக்கில் சேரவில்லை. இதன் மதிப்பு ரூ.100 கோடி ஆகும். வசூலானவற்றில் சுமார் 2,000 காசோலைகளில் அதன் வங்கிக்கணக்குகளில் பணம் இல்லை எனத் திரும்பியுள்ளன.

மேலும் சுமார் 6,000 காசோலைகள் எழுத்துப்பிழை உள்ளிட்டப் பல்வேறு காரணங்களால் செலுத்த முடியாமல் சிக்கியுள்ளன. ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் நேரடியாக தம் இணையதளக் கணக்குகள் மூலம் செலுத்தியவர்களிடம் இந்த பிரச்சனைகள் இல்லை.

இந்நிலையில், ராமர் கோயில் கட்டும் பணி துவங்கியதிலிருந்து அதைக் காண அன்றாடம் பல ஆயிரம் ராம பக்தர்கள் வந்தபடி உள்ளனர். இவர்களுக்காக அக்சிஸ் வங்கி புதிதாக ஏடிஎம் அமைத்துள்ளது.

இதை எஸ்பிஐ, பஞ்சாப் தேசிய வங்கியும் அமைக்கத் திட்டமிடுகின்றன. அயோத்தி கூடுதல் பக்தர்கள் சேவைக்காக பஞ்சாப் தேசிய வங்கியின் புதிய கிளையும் அமைக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x