Published : 22 Mar 2021 12:14 PM
Last Updated : 22 Mar 2021 12:14 PM

ரூ.100 கோடி மாமூல் வசூலிக்க அமைச்சர் கூறியதாக புகார்: நெருக்கடியில் உத்தவ் தாக்கரே; மகாராஷ்டிர ஆளும் கூட்டணி இன்று ஆலோசனை

மும்பை

மகாராஷ்டிரா மாநில அமைச்சர் அனில் தேஷ்முக், மும்பையில் உள்ள ஹோட் டல்கள், பார்களில் மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலிக்கச் சொன்னார் என ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் புகார் தெரிவித்த நிலையில் ஆளும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதனால் உத்தவ் தாக்கரே அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீட்டுக்கு அருகே கடந்த மாதம் 25-ம் தேதி ஒரு கார் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த்து. அந்தக் காரை போலீஸார் சோதனையிட்டதில், வெடிபொருட்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் இருந்தன.

மேலும் அம்பானி குடும் பத்தினருக்கு மிரட்டல் விடுக்கும் கடிதமும் அதில் இருந்து கைப்பற் றப்பட்டது. இந்த வழக்கு உதவி காவல் ஆய்வாளர் சச்சின் வாஸ் தலைமையிலான குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், மார்ச் 5-ம் தேதி அந்த காரின் உரிமையாளரான மான்சுக் ஹிரன், தானே பகுதியில் உள்ள நீர்நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தனது கணவரின் மரணத்தில் சச்சின் வாஸுக்கு தொடர்பு இருக்கலாம் என ஹிரன் மனைவி தெரிவித்தார்.

ஹிரன் மரண வழக்கை தீவிரவாத தடுப்புப் பிரிவும் வெடிபொருள் நிரப்பிய கார் நிறுத்தப்பட்ட வழக்கை என்ஐஏ-வும் விசாரித்து வருகின்றன. இதனிடையே, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஹிரன் அந்தக் காரை நிறுத்திவிட்டு மற்றொரு காரில் தப்பிச் சென்றது தெரிந்தது. அந்த காரை சச்சின் வாஸ் பயன்படுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, சச்சின் வாஸை என்ஐஏ அதிகாரிகள் கடந்த 13-ம் தேதி கைது செய்தனர். மேலும் காவலர் வினாயக் ஷிண்டே மற்றும் நரேஷ் தாரே ஆகிய இருவரும் ஹிரன் மரண வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மும்பை காவல் ஆணையர் பரம் வீர் சிங் கடந்த 18-ம் தேதி ஊர்க்காவல் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அம்பானி வீட்டுக்கு மிரட்டல் விடுத்த விவகாரமே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக நிர்வாக காரணங்களுக்காக பரம் வீர் சிங்கை பணியிட மாற்றம் செய்யவில்லை என்றும் மன்னிக்க முடியாத வகையில் மெத்தனமாக செயல்பட்டதே காரணம் என்றும் மாநில அரசின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

இந்தச் சூழ்நிலையில், பரம் வீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு கடிதம் எழுதினார். 8 பக்கங்களைக் கொண்ட அதில், “மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், உதவி காவல் ஆய்வாளர் சச்சின் வாஸ் உள்ளிட்ட காவலர்களிடம் மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

குறிப்பாக மும்பையில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பார்களில் ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை வசூலிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுக் கப்பட்ட விவகாரத்தில் என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள்” என கூறப் பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அமைச்சர் அனில் தேஷ்முக் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக்கோரி மும்பை, நாக்பூர், புனே நகரங்களில் பாஜக வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோல மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சித் தலைவரும் அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளை அனில் தேஷ்முக் மறுத்துள்ளார்.

இந்நிலையில், ஆளும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அனில் தேஷ்முக் தற்காலிகமாக பதவி விலக வேண்டும் என சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே விரும்புவதாக கூறப்படுகிறது.

ஆனால் இதனை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தை வைத்து மகாராஷ்டிர அரசை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் புகார் தெரிவித்து இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x